நலம் நாடி செயலி புறக்கணிப்பு; சிறப்பு பயிற்றுநர்கள் அறிவிப்பு
விருதுநகர்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாததால் 'நலம் நாடி' செயலியை புறக்கணிப்பு செய்து வருவதாக விருதுநகரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் காணிராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள், கட்டட ஆய்வுகளுக்கான பொறியாளர்கள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் உள்பட பல்வேறு பதவிகளில் பணியாளர்கள் பணி புரிகின்றனர்.இவர்களில் சிறப்பு பயிற்றுநர்கள் தவிர மற்ற அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. கடந்தாண்டு முதல் தற்போது வரை சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு, தொழிலாளர் வைப்பு நிதி வழங்கப்படவில்லை.இதை வலியுறுத்தி செப். 11, 12 ல் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்ட போது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இரு மாதங்களை கடந்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அன்றாடம் அளிக்கப்படும் பயிற்சி, வருகை பதிவு, வழிகாட்டுதல் உள்பட பல்வேறு பணிகளை தினசரி பதிவேற்றும் 'நலம் நாடி' செயலியை நவ. 24 முதல் புறக்கணிப்பு செய்து வருகிறோம்.சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு, தொழிலாளர் வைப்பு நிதி உள்பட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு டிச.3 க்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தலைமை செயலகம் முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்றார்.