உள்ளூர் செய்திகள்

கவனத்துடன் கல்லுாரியை தேர்வு செய்யுங்கள்

விழுப்புரம்: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் மிகுந்த கவனத்துடன் மாணவர்கள் கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை பிரிவு செயலர் புருஷோத்தமன் கூறினார்.விழுப்புரத்தில் நடந்த தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி கல்வி நிறுனத்தோடு இணைந்து நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவி கள் உங்களின் யுசர் ஐ.டி., யில் தினமும் உங்களின் ஸ்டேட்டஸ் நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். வரும் 27ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. இங்கு ரேங்க் லிஸ்ட் மூலம் மாணவர்களுக்கான கல்லுாரி, பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது. ஓவர் ஆல் ரேங்க், கம்யூனிட்டி ரேங்க் மூலம் மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண் மூலம் தரம் பிரிக்கப்படுகிறது.சுற்றுகள் மூலம் நீங்கள் கவுன்சிலிங்கில் பங் கேற்க வேண்டும். முதலில் இருந்து நான்கு சுற்றுகளில் ரேங்க்கில் குறைபாடுகள் இருந்தால் கண்டறிந்து தீர்த்துக் கொள்ளலாம். இந்த குறைகளை அரசு வழங்கியுள்ள அரசு பொறியியல் கல்லுாரி சேவை மையங்களில் உங்களின் ஆதார் விபரங்களை வழங்கி ரேங்க் குறைபாடுகளை கூறி சரி செய்து கொள்ளலாம்.இதற்கு 4 நாட்கள் அவகாசம் உள்ளது. கால் சென்டர் எண்.18004250110 மூலமும் தீர்த்துக் கொள்ளலாம். ஸ்பெஷல் ரிசர்வேஷனில் மாற்றுத் திறனாளி, அரசுப் பள்ளி மாணவர்களும், பொது ரிசர்வேஷன் பிரிவில் முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், விளையாட்டு துறை மாணவர்கள் பங்கேற்கலாம்.சிரமம், அச்சமின்றி கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்கலாம். நீங்கள் கல்லுாரியை ஜாக்கிரதையாக தேர்வு செய்ய வேண்டும். சாய்ஸ் மூலம் மாணவர்கள் கல்லுாரி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். இதை நீங்கள் எத்தனை கல்லுாரி, பாடப்பிரிவுகள் ஆகியவற்றை வரிசையாக செலுத்த வேண்டும். இதில், கல்லுாரியின் கோடு கவனமாக பதிவு செய்ய வேண்டும்.நீங்கள் கல்லுாரியை தேர்வு செய்யும் முன், கல்லுாரியின் தரம், தரச்சான்று, வேலை வாய்ப்பு பெற்று சென்றோர் ஆகியவற்றை தெரிந்து கொண்டு தேர்வு செய்யலாம். அதற்கான கால அவகாசம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.இறுதியாக உங்களின் கட் ஆப் மதிப்பெண் பொறுத்து, கிடைக்கும் கல்லுாரியை தேர்வு செய்து அங்கு நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும். அனைத்து நிலைகளையும் தெரிந்து கொண்டு கல்லுாரி கட்டணத்தை கட்டி உங்கள் சீட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு பொது கவுன்சிலிங் முறையில் 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தனியாக ரேங்க் வரும். கவுன்சிலிங் முறையில் உங்களுக்கு உதவ அரசு சேவை மையங்கள் உள்ளது. அனைவரும் நல்ல கல்லுாரியை தேர்வு செய்து, படித்து வாழ்வில் வெல்ல வாழ்த்துக்கள்.இவ்வாறு புருஷோத்தமன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்