5 பேருந்துகளை மாற்றுத் தடத்தில் இயக்குவதால் பள்ளி மாணவர்கள் அவதி
திருத்தணி: பள்ளி மாணவர்களுக்காக இயக்கப்பட்ட, ஐந்து பேருந்துகளை நிறுத்தம் செய்து, வருவாய் காட்ட, மாற்று தடத்தில் இயக்கப்படுவதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, மொத்தம், 74 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான கிராமங்களுக்கு பேருந்து வசதியில்லாததால் மாணவர்கள் மேல்நிலை மற்றும் கல்லுாரி கல்வி கற்க, திருத்தணிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். மேலும், கிராமவாசிகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க திருத்தணிக்குதான் வரவேண்டும். 5 பேருந்துகள் நிறுத்தம்: பள்ளி மாணவர்கள், கிராமவாசிகளின் நலன் கருதி, 2012ம் ஆண்டு, மார்ச் மாதம், திருத்தணி பணிமனை சார்பில், திருத்தணி - புச்சிரெட்டிப்பள்ளி, கே.ஜி.கண்டிகை - புச்சிரெட்டிப்பள்ளி, திருத்தணி -- நல்லாட்டூர் ஆகிய மூன்று வழித்தடங்களில், மூன்று பேருந்துகளை, அப்போது அமைச்சராக இருந்த ரமணா, துவக்கி வைத்தார். ஆனால், அந்த மூன்று பேருந்துகளும், ஒரு மாதம் மட்டுமே இயக்கப்பட்டன. அதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, மாணவர்கள், பகுதிவாசிகள், போக்குவரத்து உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதே போல், 97 கே, 97 ஜி ஆகிய இரண்டு பேருந்துகளும் படிப்படியாக அந்த தடத்தில் நிறுத்தப்பட்டன. மாற்று வழித்தடத்தில்... மேற்கண்ட பேருந்துகள் அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாமல், மாற்று வழித்தடங்களில், திருத்தணி - திருவள்ளூர், திருத்தணி - திருச்சி மற்றும் அமாவாசைக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்மலையனுாருக்கும், பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாற்று வழித்தடத்தில் இயக்குவதற்கு காரணம், வருவாய் அதிகமாக காட்ட இயக்கப்படுவதாக, அதே துறை ஊழியர்கள் கூறுகின்றனர். அரசு அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, முனைப்புடன் செயல்படுகிறது. ஆனால், போக்குவரத்து துறை அதிகாரிகள் குளறுபடியால், ஐந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து, போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதும் மாணவர்கள் வசதிக்காக பள்ளி நேரத்தில் பத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கே.ஜி.கண்டிகையில் அமைச்சரால் துவக்கப்பட்ட பேருந்துகள், திருத்தணியில் தற்போதும் மேற்கண்ட இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், கே.ஜி.கண்டிகையில் அமைச்சர் துவக்கியதால், அங்கிருந்து புறப்பட வேண்டும் என, மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சில நேரங்களில் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில்தான் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன" என்றார்.