6 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 700க்கும் மேற்பட்டோர் பணி நியமனம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடப்பாண்டில் நடத்தப்பட்ட, ஆறு வேலைவாய்ப்பு முகாமில், 700க்கும் மேற்பட்டோர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், ஒவ்வொரு மாதமும், 3வது வெள்ளி கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தவிர, 2 முதல், 3 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமும், மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாகவும், மலைவாழ் மக்களுக்கு மலைப்பகுதியில் தனியாகவும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.இதுபற்றி, வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், மாவட்ட நிர்வாகம் மூலம் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் மாதம்தோறும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.நடப்பு, 2024ம் ஆண்டில் கடந்த, 10 மாதங்களில் லோக்சபா தேர்தல் நடந்த மாதங்கள் நீங்கலாக, ஆறு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், 154 வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்று, தேர்வு செய்தனர். 1,500க்கும் மேற்பட்டோர், 8 ம் வகுப்புக்கு மேல் படித்தோர், பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், டிரைவர், டைப்ரைட்டிங் படித்தவர்கள், பொறியாளர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் என பலரும் பங்கேற்றனர். அதில், 300க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று, பணி நியமன ஆணையை பெற்று, பணி செய்கின்றனர்.இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பில் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம், 10,000 முதல், 20,000 ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக, பயனாளிகள் தெரிவித்துள்ளனர். அதுபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் நடத்தப்பட்ட முகாமில், 14 வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றதில், 40 பேர் வேலைவாய்ப்பை பெற்றனர். இதில், 31 ஆண்கள், 9 பேர் பெண்கள்.முகாமில், மாவட்ட தொழில் மையம் மூலம், தொழில் முனைவோருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. மாவட்ட முன்னோடி வங்கிகள் பங்கேற்று, வங்கி கடன் பெறுவது தொடர்பாக வழிகாட்டுகிறது. கடந்த, 19 காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், 400 பேர் பணி நியமன ஆணை பெற்றனர்.இவ்வாறு தெரிவித்தனர்.