61,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, பணி நியமன கடிதம் வழங்கினார் மோடி
நாடு முழுதும் ஒரே நாளில், 61,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, மத்திய அரசு பணிகளுக்கான பணி நியமன கடிதத்தை வழங்கிய பிரதமர் மோடி, “பல நாடுகளுடன் மத்திய அரசு மேற்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்,” என பெருமிதத்துடன் தெரிவித்தார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையிலும், நம் நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும், 2022ல் 'ரோஜ்கர் மேளா' எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.உத்தரவுகள் இத்திட்டத்தின் 18வது வேலைவாய்ப்பு முகாம், நாடு முழுதும் 45 இடங்களில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், ஒரே நாளில் 61,000க்கும் மேற்பட்டோருக்கு மத்திய அரசு பணிக்கான உத்தரவுகள் நேற்று வழங்கப்பட்டன.மத்திய அரசின் உள்துறை, சுகாதாரத்துறை, நிதி சேவை, உயர் கல்வி உட்பட பல அமைச்சகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக தேர்வானவர்களுக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டன.டில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பிரதமர் மோடி இதை துவக்கி வைத்து பேசியதாவது:நாடு முழுதும் ஒரே நாளில், 61,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசு பணிகளுக்கான பணி நியமன கடிதங்களை பெறுவதன் மூலம், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளனர்.இந்த இளைஞர்கள், நம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பர். இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பையும், சுய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதே அரசின் முன்னுரிமை.வேலைவாய்ப்புகள் வேலைவாய்ப்பு திருவிழா, ஒரு இயக்கமாக மாறியுள்ளது. இந்த முயற்சியின் மூலம், இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பல அரசு துறைகளில் நியமன கடிதங்களை பெற்றுள்ளனர்.உலகில் இளம் தலை முறையினர் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இளைஞர்களுக்காக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.மத்திய அரசு பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகிறது. இவை, நம் நாட்டு இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.நம்பிக்கை சமீபகாலமாக, இந்தியா நவீன உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடுகளை செய்துள்ளதால், கட்டுமானம் தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.இதேபோல் நம் நாட்டில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவன சூழல் அமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது. இதுவரை 2 லட்சம் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், 21 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை பணி அமர்த்தி உள்ளன.இந்தியாவின் மீது உலக அளவிலான நம்பிக்கை அதிகரித்து வருவது, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா இரண்டரை மடங்குக்கும் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. இது, இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.பணி நியமனம் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், இளம் தொழில்முனைவோருக்கும் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கும் பயனளித்துள்ளன. இந்த வேலைவாய்ப்பு திருவிழாவில், 8,000க்கும் மேற்பட்ட பெண்கள் பணி நியமன கடிதங்களை பெற்றுள்ளனர்.இது, கடந்த 11 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 'முத்ரா, ஸ்டார்ட் அப் இந்தியா' போன்ற திட்டங்கள், பெண்களின் சுய வேலைவாய்ப்புக்கு பெரிதும் பயனளித்துள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.11 லட்சம் வேலைகள்! கடந்த 2022ல், 'ரோஜ்கர் மேளா' எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா என்ற திட்டத்தை மத்திய அரசு துவங்கியது இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன நாடு முழுதும் 45 இடங்களில் நடந்த வேலைவாய்ப்பு திருவிழாக்களின் மூலம், ஒரே நாளில் 61,000 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது இதில், 8,000க்கும் மேற்பட்டோர் பெண்கள்.