654 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு
சென்னை: தமிழக அரசு பணியில், 654 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடத்த உள்ளதாக, அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.நேர்காணல் இல்லாமல் எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில், இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தேர்வு எழுத விரும்புவோர், www.tnpscexams.in என்ற இணையதளம் வழியாக, ஆக., 24 காலை 11:59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அக்., 26ல் நடத்தப்படும்.காவல் துறை வீட்டுவசதி கழகம் உள்ளிட்ட 53 துறைகளில், உதவிப் பொறியாளர்கள், வேளாண் அலுவலர், உதவி இயக்குனர், மருந்து ஆய்வாளர் என, 654 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது, கல்வித் தகுதி போன்ற விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.