9 மையங்களில் நீட் தேர்வு: 4,855 மாணவர்கள் பங்கேற்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று 9 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 4,855 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., சித்தா, யுனானி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடந்தது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தியது.விழுப்புரம் மாவட்டத்தில், 5,000க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் சென்ட்ரல் பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, அக்ஷர்தம் சென்ட்ரல் பள்ளி, ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி, இ.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி, சேக்ரட் ஹார்ட் கலை அறிவியல் கல்லுாரி, விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரி, கோலியனுார் நியூ ஜான்டூயி இன்டர்நேஷனல் பள்ளி என 9 மையங்களில், 5005 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.காலை 11:30 மணியிலிருந்து, மாணவ, மாண வியர்கள் அனுமதிக்கப்பட் டனர். வளாக கேட் பகுதியிலேயே, போலீசார் உதவியுடன், தேர்வு குழுவினர் மூலம் கடும் சோதனை செய்யப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.ஹேர் கிளிப், ஹேர் பேண்டு, பவுன் செயின், கம்மல் போன்றவை கழற்றி பெற்றோரிடம் வழங்கப்பட்டது. உரிய ஆடை கட்டுப்பாடு களுடன், ஆதார் அடையாள அட்டை, ஹால்டிக்கெட், 2 புகைப்படம் கொண்டு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.கடும் வெயில் காரண மாக மாணவர்களும், பெற் றோர்களும் நிற்க முடியாமல் வாயில் பகுதியில் அவதிப்பட்டனர். ஒரு சில மையத்தில் மட்டும் வாயிலில் பந்தல் போட்டிருந்தனர். பகல் 1:30 மணி வரை மட்டுமே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்த பிறகு, பகல் 2:00 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5:20 மணி வரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடந்தது.இந்த 9 தேர்வு மையங்களிலும், தலா ஒரு தலைமை ஆசிரியர் தலைமையில், தலா 2 அறை கண்காணிப்பாளர்கள், 20 தேர்வு அப்சர்வர்கள், தலா ஒரு பாதுகாப்பு அலுவலர்கள் என 420 பேர் பணியில் ஈடுபட்டனர். 5005 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 4,855 பேர் பங்கேற்றனர். 150 பேர் ஆப்சென்ட் ஆகினர்.