9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ., 8ல் திறனாய்வு தேர்வு
எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் ஈரோடு மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடக்கவுள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி ஞாயிறன்று மாவட்டத்தில் உள்ள ஐந்து மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வானது காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை நடக்கிறது. மத்திய அரசு சென்றாண்டில் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தியது. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அவரவர் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் ஒருவருக்கு மாதம் ஒரு முறை 500 ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாணவருக்கு பத்து மாதங்களுக்கு உண்டான கல்வித்தொகையாக 5,000 ரூபாய் வழங்கவுள்ளது. இந்த கல்வித்தொகை 9, 10, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வரை கல்வி பயில உதவியாக இருக்கும். தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு தனித்தனியே அங்கீகரிக்கப்பட்ட வங்கி மூலம் கணக்கு துவங்கி அதன் மூலம் பணப் பட்டுவாடா செய்யப்படவுள்ளது. இதற்காக அந்த மாணவருக்கு தனியாக வங்கி பாஸ்புக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜர் நகராட்சி பள்ளி, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு நடக்கவுள்ளது. ஐந்து மையங்களில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் ஹால் டிக்கெட் ஈரோடு மாவட்ட கல்வித்துறை அதிகாரியால் தபால் மூலம் நேற்று பெறப்பட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டுகள் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஈரோடு சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 344 பேரும், காமராஜர் பள்ளியில் 294 பேரும் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்களில் கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்களை சென்னை அரசு தேர்வுத்துறை தேர்வு செய்யும்.