977 செவிலியர்களை நியமிக்க அரசு முடிவு
சென்னை: கொரோனா வைரஸ் பரவலின் போது, அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில், 2,366 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என, 2022 டிசம்பர், 30ல் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் 977 பேர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மனுதாரர்களை, அரசு மருத்துவமனைகளில் நிரந்தரமாக பணி அமர்த்த உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இம்மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. காலியிடங்களில், வழக்கு தொடர்ந்த 977 பேரையும் நியமிக்க பரிசீலிக்கும்படி, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்ந்தவர்களை, காலியிடங்களில் முதல் கட்டமாக நிரப்புவது என, அரசு முடிவெடுத்திருப்பதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அரசின் கடிதத்தையும் தாக்கல் செய்தார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:காலியிடங்களில், முதல் கட்டமாக 977 பேரை நியமிப்பதாகவும், அதன்பின் உருவாகும் காலியிடங்களில் மீதி உள்ள 1,389 பேரை நியமிப்பதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனியாரிட்டி, தகுதி, ஜாதி சுழற்சி அடிப்படையில், காலியிடங்களில் நியமிக்க, 977 பேருக்கும் முன்னுரிமை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.அரசின் முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அரசு உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் செயல்பட்டு, இரண்டு வாரங்களில் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். விசாரணை, வரும் 22க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.