உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பதவியை தக்கவைக்க காய் நகர்த்தும் முதல்வர் சித்தராமையா

பதவியை தக்கவைக்க காய் நகர்த்தும் முதல்வர் சித்தராமையா

மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடு விவகாரம் பூதாகரமானால், முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது முதல்வர் பதவி தங்களுக்கு கிடைக்கும் என, சில தலைவர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இதை உணர்ந்துள்ள முதல்வர், பதவியை தக்கவைத்துக்கொள்ள திரைமறைவில் முயற்சிக்கிறார்.கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தபோது, முதல்வர் பதவிக்கான போட்டியில், சித்தராமையா வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி அவருக்கு மலர் கிரீடமாக இல்லை; முள் கிரீடமாக வாட்டி வதைக்கிறது என்பது, ஊரறிந்த ரகசியம்.

எதிரிகள் சுறுசுறுப்பு

முதல்வர் பதவியில் அமர்ந்த நாளில் இருந்தே, இவரை கீழே இறக்க காங்கிரசிலேயே சிலர் உள்குத்து வேலையை துவங்கிவிட்டனர். மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த பின், சித்தராமையா எதிர்ப்பாளர்கள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர்.முதல்வரின் மனைவி பார்வதி பெயரில் வீட்டுமனைகள் பெறப்பட்டதை பூதாகரமாக்கி, சித்தராமையாவே பதவியை ராஜினாமா செய்வார் என, காங்கிரசில் உள்ள அவரது எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முயற்சிக்கு பலன்

மூடா தொடர்பான ஆவணங்களை, பா.ஜ., வினரிடம் கொடுத்ததே காங்கிரசார் தான் என, கூறப்படுகிறது. இது பற்றி எதிர்க்கட்சியினர் பல முறை கூறினர். தன்னை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற, தன் கட்சியிலேயே முயற்சி நடப்பது முதல்வருக்கும் தெரியும்.எனவே தான் ஜாதி அஸ்திரத்தை அவர் பயன்படுத்துகிறார். பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர் முதல்வராக இருப்பதை, பா.ஜ.,வால் சகிக்க முடியவில்லை என, அவ்வப்போது குற்றஞ்சாட்டுகிறார்.முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள, காய் நகர்த்துகிறார். பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயங்களை தனக்கு ஆதரவாக நிற்க வைத்து, எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, சம்பந்தப்பட்டோருடன் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. அவரது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.குருபர் சமுதாயத்தின் நிரஞ்சனானந்தபுரி சுவாமிகள் தலைமையிலான மடாதிபதிகள், சமீபத்தில் முதல்வரை சந்தித்தனர். இதன் மூலம் தாங்கள் முதல்வருக்கு பக்கபலமாக நிற்கிறோம் என்பதை உணர்த்தினர்.தலித் அமைப்பினரும், மூடா வழக்கு விசாரணைக்கு அனுமதி அளித்த கவர்னரை கண்டித்து, போராட்டம் நடத்தினர். 2023ல் தாவணகெரேவில் சித்தராமோற்சவம் நடத்தியதை போன்று, பெரிய அளவில் போராட்டம் நடத்தவும், அவரது ஆதரவாளர்கள் தயாராகின்றனர்.

இது தொடருமா?

இந்த விஷயத்தில், காங்கிரஸ் மேலிடம் தற்போதைக்கு முதல்வர் சித்தராமையாவுக்கு பக்கபலமாக நிற்கிறது என்றாலும், இது தொடரும் என்று கூற முடியாது.நீதிமன்றத்தில் முதல்வருக்கு பின்னடைவு ஏற்பட்டால், அவரிடம் ராஜினாமா கடிதம் பெற்றாலும் ஆச்சரியப்பட முடியாது.அது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், தனக்கு ஆதரவாக குரல் கொடுக்க, பிற்படுத்தப்பட்டோர், தலித் சமுதாயங்களை முதல்வர் தயார்படுத்துகிறார்.முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ராஜினாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டபோது, லிங்காயத் சமுதாயத்தினர் அவருக்கு ஆதரவாக நின்றனர். அவர்களின் நெருக்கடிக்கு பணியாமல், மேலிடம் அவரிடம் ராஜினாமா பெற்றுக் கொண்டு, பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியது. இதேபோன்று, காங்கிரஸ் மேலிடமும் நடந்து கொள்ளுமா என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி