உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தனியார் பள்ளிகளில் ஹிந்தி பாட சர்ச்சை

தனியார் பள்ளிகளில் ஹிந்தி பாட சர்ச்சை

சென்னை: 'தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால், அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக்கொள்கை தானே தவிர, தி.மு.க.,வினர் காரணமல்ல' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதற்கு, தமிழக பா.ஜ., தரப்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

பட்டியல் வெளியிடுவது நோக்கமல்ல

கட்சியினருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி, என் பிறந்த நாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், தமிழிசை வாழ்த்தி, தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய 'பண்பையும்' காட்டியிருக்கிறார்.தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில், 'ஹிந்தி' இடம்பெறவில்லை. அதுதான் தமிழகத்தில் நிலவும் உணர்வின் வெளிப்பாடு. தமிழ்,- ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப்பின், தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். எனக்கு தெலுங்கு தெரியாது; நான் படித்ததும் இல்லை. தெலுங்கானா மாநில கவர்னராக இருந்த தமிழிசை, தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை. தேவைப்படுவோர் அதை புரிந்து பயன்படுத்த முடியும். தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும், ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என, விமர்சனம் செய்கின்றனர். பரம்பரை பரம்பரையாகவே கல்வி வியாபாரம் செய்யும் பா.ஜ., குடும்பத்தினர் பட்டியலை வெளியிட்டு, பதிலுக்குப் பதில் பேசுவது நம் நோக்கமல்ல.உரிய அனுமதியுடன் எந்தக் கட்சியை சார்ந்தவர்களும், எந்தவொரு கட்சியையும் சாராதவர்களும் பள்ளிகளை நடத்த முடியும். தி.மு.க.,வினரில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துவோரும், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துவோரும் உரிய அனுமதியுடன் தான் நடத்துகின்றனர். தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால், அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக் கொள்கை தானே தவிர, தி.மு.க.,வினரோ, வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள்.தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. ஹிந்தி மொழி என்பது கட்டாயமுமில்லை. அந்த மொழியில் தேர்வு நடத்தப்படுவதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காந்தி கூறியதை தி.மு.க., ஏற்குமா?

நாராயணன் திருப்பதி பதில் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில், தி.மு.க.,வினர் கல்வி வியாபாரம் செய்வதை ஒப்புக் கொண்டுள்ளார். மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெறாமல், மத்திய அரசு சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவக்க அனுமதி தராது. இதை முதல்வர் மறுப்பதில் இருந்தே, கல்வி வியாபாரத்தில், தி.மு.க.,வினர் கொடிகட்டி பறக்கின்றனர் என்பதை உணர முடிகிறது.பா.ஜ.,வினர் நடத்தும் பள்ளிகள் குறித்து பட்டியலை, தாராளமாக முதல்வர் வெளியிடட்டும்; கவலை இல்லை. எங்கள் இயக்கத்தை சார்ந்த, ஜெய்கோபால் கரோடியா ஆதரவுடன் செயல்படும், அரசு பள்ளிகள் பட்டியலையும் வெளியிடட்டும். டில்லி, ஹரியானாவுக்கு அடுத்து, தமிழகத்தில் தான் அதிக சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. மத்திய அரசின் கல்விக் கொள்கையை, தி.மு.க.,வினரும், முதல்வரின் குடும்பத்தினரும் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன? தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்து, மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற, ஒரு நொடி போதுமே... அதற்கு முதல்வர் உத்தரவிடுவாரா?மாநில பாட திட்டத்தில் செயல்படும், தனியார் பள்ளிகள் எவ்வளவு, மற்ற பாடத்திட்டங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் எவ்வளவு என்ற பட்டியலை வெளியிடத் தயாரா? ஹிந்தியை நாட்டில் உள்ள அனைவரும், தேசிய மொழியாக ஏற்க வேண்டும் என காந்தி கூறினார். அதை தி.மு.க., ஏற்குமா? எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் சமூக நீதி. ஆனால், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் மூன்று மொழி கற்கின்றனர். அதே வேளையில், அரசு பள்ளி மாணவர்கள் மட்டும், இருமொழி மட்டுமே கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது, சமூக அநீதியல்லவா?தேசிய கல்விக் கொள்கையை, தமிழக அரசு செயல்படுத்துவதன் வழியே, இந்தியாவின் அனைத்து மாநில பள்ளிகளிலும், தமிழ் கற்பிக்கக் கூடிய வாய்ப்பை, முதல்வர் தட்டிப் பறிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

nb
மார் 05, 2025 17:13

காசு இருந்தா ப்ரைவேட் ஸ்கூல்ல படி. ஓஷில ஹிந்தி படிக்க நினைக்க கூடாது


prabakaran
மார் 05, 2025 15:30

I studied Hindi in 60s in a Municipal School Karur. No exams, no pass mark but all attended the Hindi class without any hesitation or reservation. what prevented now? and who?


Rajarajan
மார் 05, 2025 11:54

ஒரே கேள்வி , ஒரே பதில். தி.மு.க. அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகளில் / அவர்கள் வாரிசுகள் கருணாநிதியின் சமசீர் கல்வியை மதிப்பதில்லையே ?? பின்னர் , என்ன ...... க்கு அடுத்தவருக்கு உபதேசம் ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 05, 2025 10:18

இந்தியாவிலேயே கல்வியை விற்பனைக்கு விட்ட முதல் மாநிலம் தமிழகம். மறைந்த மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு கருணாநிதி அவர்கள் காலத்தில் எம்பிபிஎஸ் சீட் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து கல்வியை கூட வியாபாரம் ஆக்கி இலாபம் பார்த்தவர்கள் திமுகவினர். அந்த சமயத்தில் அரசு கல்லூரிகளில் தான் எம்பிபிஎஸ் படிப்பு உண்டு. அதையே விற்பனை செய்தவர்கள் திமுகவினர். ஆகவே கல்வியை வியாபாரம் ஆக்குவதை பற்றி பேச திமுகவிற்கு அருகதையே கிடையாது. நிற்க இது ஒரு புறம் இருக்கட்டும். உண்மையிலேயே தமிழ் மீது நெஞ்சார்ந்த அக்கறை தமிழ் மொழியை இன்னும் வளர்க்க வேண்டும் என்ற அக்கறை பாசம் இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டு இங்குள்ள பள்ளிகளில் நடைமுறை படுத்தி விட்டு இந்தியாவில் உள்ள மற்ற 27 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களுக்கு தமிழகத்தின் சார்பில் பல்வேறு தமிழ் அறிஞர்கள் கொண்ட தூதுக்குழுக்களை அனுப்பி அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தமிழை தெரிவு செய்ய வைத்து தமிழ் மொழியை இந்தியா முழுவதும் பரப்பி தமிழை இந்திய ஆட்சி மொழியாக அல்லவா கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். தமிழ் பாட புத்தகங்கள் தமிழ் ஆசிரியர்களை மத்திய அரசு அளிக்கும் நிதியை உபயோகப் படுத்தி மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் கொடுத்திருக்கலாம். இதன் மூலம் இன்னும் பத்து வருடங்களுக்குள் தமிழ் மொழியை இந்திய அளவில் பரப்பி இருக்கலாம். இதே பத்து வருடங்களுக்குள் திமுக அதிமுக அகில இந்திய கட்சியாக மாற்றி அனைத்து மாநிலங்களிலும் போட்டி இடலாம். தற்போது எடுக்கும் இந்த முயற்சி உங்களுக்கு உதவா விட்டாலும் வாரிசு அரசியல் பரம்பரை அரசியல் நடத்தும் உங்கள் மகன் அல்லது பேரன் பிரதமர் பதவிக்கு வர கூட முடியும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. நீங்கள் உங்கள் உயிருக்கு மேலாக நினைக்கும் தமிழ் சினிமாவை கூட அகில இந்திய அளவில் மொழி மாற்றம் செய்யாமல் வெளியிட்டு கொள்ளை இலாபம் பார்க்கலாம். தமிழ் அகில இந்திய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தமிழக மாணவர்கள் ஹிந்தி படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த நூதன முறையை பின்பற்றி ஹிந்திக்கு எதிராக தமிழை அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் திணியுங்கள். ஹிந்தி திணிப்பு விஞ்ஞான ரீதியாக தமிழ் திணிப்பாக மாற்றி காட்டுங்கள். மோடி மஸ்தான் கட்டாயம் தமிழிலேயே உபியில் பேச வைக்கலாம். கவர்னர் ரவி அமித் ஷாவுடன் பேசும் போது வேறு வழி இல்லாமல் தமிழில் பேசட்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ். வாழ்க தமிழ் வளர்க தமிழகம் எல்லை கோடு இல்லாமல்.


ஆரூர் ரங்
மார் 05, 2025 09:30

CBSC வாரியம் பள்ளிகளுக்குள் தமிழில் பேசினால் அபராதம் விதிக்க கூறவில்லையே. SHINE பள்ளியில் ஏன் வசூலிக்கிறார்கள்? அது தமிழை வளர்க்க சுடாலின்மகள் உருவாக்கிய நூதன வழியா? தமிழினத் தலைவர் குடும்பமே இரட்டை வேடக் கூட்டம்.


ஆரூர் ரங்
மார் 05, 2025 09:20

திமுக விடம் நேர்மை துளியளவு இருந்தால் தமது குடும்பங்கள் மாநில சிலபஸ் சமச்சீர் பள்ளிகளை நடத்தலாமே. CBSC பாடத்திட்ட பள்ளிகளை மட்டுமே நடத்த வேண்டும் என வற்புறுத்திவில்லையே. ஆக திமுக குறுநில மன்னர் குடும்பங்கள் கூட சமச்சீர் பாடத்திட்டத்தை CBSC ஐ விட மட்டம் எனக் கருதுகின்றனர்.


Velan Iyangaar, Sydney
மார் 05, 2025 08:28

ஊசிப் போன உருட்டு. இது ஒண்ணும் 1967 இல்லை. 2025....குருவி மேல் யானை அப்டின்னு யாரோ எழுதி குடுத்ததை எழுத்து கூட்டி படிச்சிட்டு போ


பேசும் தமிழன்
மார் 05, 2025 08:02

தமிழகத்தில்.... அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என்று இவர்கள் ஏன் சட்டம் கொண்டு வரவில்லை ???.... அதே போல் இவர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமெ கற்றுத்தரப்படும் என்று ஏன் கூறவில்லை.... இவர்களின் வீட்டு பிள்ளைகளை..... இவர்கள் கூறும் அதே இரண்டு மொழியில் மட்டுமெ ஏன் படிக்க வைக்கவில்லை ???..... இன்னும் எத்தனை காலம் தான் தமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைப்பீர்கள் ???


முக்கிய வீடியோ