வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உண்மை,நேர்மை,துணிவு,விவேகம் ஆகியவற்றுடன் தொண்டாற்றும் தினமலரை லண்டனில் இருந்து வாழ்த்துகிறேன்.
வாழட்டும் வாழ்த்துகிறோம்
சுதந்திர போராட்ட வீரர்களான பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துகோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சிதம்பரம், பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என்பதால், திருநெல்வேலிக்கு வாழ்நாள் முழுதும் பெருமை தான்! சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த மண், வீரம் விளைந்த மண்ணாக கருதப்படும் திருநெல்வேலியில் தான் 'தினமலர்' தவழத் துவங்கியது!ஆம்... நாட்டுப்பற்று, தேசநலன், பொதுநலன், மக்கள் நலன், சமூக நலன் மீது அக்கறை கொண்ட மற்றொரு தியாகி, டி.வி.ஆர்., என அழைக்கப்படும் டி.வி.ராமசுப்பையர், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தழுவிய மகாதேவர் கிராமத்தில் 1908 அக்டோபர் 2ல் பிறந்தார். மகாத்மா காந்தி பிறந்த அதே நாளில் டி.வி.ஆரும் பிறந்துஉள்ளார்.திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் 1951 செப்., 6ல், 'தினமலர்' நாளிதழை நிறுவினார் டி.வி.ஆர்., நாஞ்சில் நாட்டை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என, தன் கூர்மையான பேனா எனும் ஆயுதத்தால், எழுதி எழுதி அதில் வெற்றி கண்டார். தன் நோக்கம் நிறைவேறியதால், நாளிதழை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து, 1957ல் தமிழகத்தின் திருநெல்வேலிக்கு மாற்றினார்.சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற மாநகரங்களை தவிர்த்து, அன்று சாதாரண நகரசபையாக இருந்த திருநெல்வேலிக்கு, திருவனந்தபுரத்தில் தான் நிறுவிய நாளிதழை துணிச்சலாக தமிழகத்திற்கு மாற்றினார். தமிழகத்தில் முதலாவதாக, திருநெல்வேலியில் பூத்த, 'தினமலர்' அதன் பின், படிப்படியாக சென்னை, வேலுார்,புதுச்சேரி, சேலம், ஈரோடு, கோயம்புத்துார், திருச்சி, மதுரை, நாகர்கோவில் என, 10 பதிப்புகளாக பறந்து விரிந்தது. சுதந்திர போராட்ட தியாகிகள் பிறந்த திருநெல்வேலியில் 'தினமலர்' உதயமாகி 73 ஆண்டுகளை நடுநிலையோடு நிறைவு செய்துள்ளது. 2024 செப்., 6ம் தேதி 74வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.மக்கள் பிரச்னை, பொது பிரச்னை, அரசியல் பிரச்னை, ஆன்மிக சிந்தனை, விளையாட்டு சிந்தனை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும், மூத்த ஆசிரியர்கள் வழிகாட்டுதலில், முதுநிலை செய்தியாளர்கள், முதுநிலை உதவி ஆசிரியர்களால் அலசி ஆராய்ந்து, தொடர்ந்து நான்கு தலைமுறைகளாக கடமை தவறாமல் நடுநிலையோடும், தனித்துவத்தோடும் செய்திகள், கட்டுரைகளை வெளியிட்ட 'தினமலர்' நாளிதழ் பவள விழாவை நோக்கி வெற்றிநடை போடுகிறது.அச்சு கோர்ப்பு, அச்சிடுதலில் துவங்கிய 'தினமலர்' நாளிதழ், இன்றைய காலத்திற்கேற்ப, அதி நவீன தொழில் நுட்பத்துடன் வண்ணமயமாய் வாசகர்கள் கையில் அதிகாலையில் தவழ்கிறது. அது மட்டுமல்ல, 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்திலும் தற்போது வாட்ஸாப், முகநுால், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் செய்திகள் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட தியாகிகள் பூலித்தேவன், ஒண்டிவீரன், செங்கோட்டையில் வாஞ்சிநாதன் பிறந்தனர். துாத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரம், எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தனர்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துகோன், ஒட்டப்பிடாரம் தாலுகா கவர்ணகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்தனர். தியாகிகள் பிறந்த அனைத்து ஊர்களும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தன. தியாகிகள் பிறந்த புண்ணிய பூமியான திருநெல்வேலியிலும் 'தினமலர்' நாளிதழ் தவழத் துவங்கியது தமிழகத்திற்கு பெருமையே! - மா.நடராஜன் -
உண்மை,நேர்மை,துணிவு,விவேகம் ஆகியவற்றுடன் தொண்டாற்றும் தினமலரை லண்டனில் இருந்து வாழ்த்துகிறேன்.
வாழட்டும் வாழ்த்துகிறோம்