முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அவரது வீட்டுக்குச் சென்று, நடிகர் ரஜினி மரியாதை செலுத்தியிருப்பது, தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v4slxkx1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி, நேற்று போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்திற்கு சென்ற ரஜினி, அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். யூகத்திற்கு வழி
எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு ஜெயலலிதா வீட்டிற்கே சென்று, ரஜினி மரியாதை செலுத்தியதும், அவரை தொடர்ந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போன்றவர்கள் வேதா இல்லத்திற்கு வந்திருந்ததும், அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த ரவீந்திரநாத், ''அ.தி.மு.க., தொண்டர்களின் எழுச்சி ஒரு நாள் வெடிக்கும். அது புரட்சியாக மாறும். அ.தி.மு.க., ஆட்சி அமைய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் தொண்டர்கள் பாடம் புகட்டுவர்,'' என்றார்.பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இணைய வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு நடத்தி வரும் பெங்களூரு புகழேந்தியும், ஜெயலலிதா வீட்டிற்கு வந்திருந்தார். இதுவும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்து உள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 21ல், ரஜினியை அவரது இல்லத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப் பேசினார். அப்போது என்ன பேசப்பட்டது என்பதை, இருவரும் சொல்லவில்லை. ஆனால், அதன்பின், சீமானின் அரசியல் பாதையும் போக்கும் அடியோடு மாறி விட்டது. ஈ.வெ.ரா.,வை மிகக் கடுமையாக விமர்சித்தது அதன் பின்னர்தான். வலுவான கூட்டணி
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டுமானால், அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தச் சூழலில், ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றிருப்பது, அ.தி.மு.க., ஒற்றுமையை வலியுறுத்துபவர்களுக்கு வலுசேர்க்கும் என்றே பலரும் கருதுகின்றனர்.கடந்த 1996ல் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி பேசியவை, தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி ஏற்படவும், ஆட்சியை பிடிக்கவும் உதவியது. ஜெயலலிதாவின் வீட்டிற்கு, 29 ஆண்டுகளுக்கு பின் ரஜினி வந்திருப்பது, அ.தி.மு.க., ஒன்றுபட உதவுமா, தி.மு.க.,வுக்கு எதிரான வலுவான கூட்டணி தமிழகத்தில் ஏற்படுத்தப்படுமா என்பது பற்றிய விவாதங்கள் இப்போது சூடுபிடித்துள்ளன.தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
ஜெயலலிதா இறப்புக்குப் பின், அ.தி.மு.க.,வில் இருந்து பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டதால், பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், மீண்டும் பன்னீரை கட்சியில் இணைத்துக் கொண்டனர். மத்திய பா.ஜ., அரசின் ஆதரவோடு, எவ்வித பிரச்னையும் இன்றி ஆட்சியை கொண்டு சென்றார் பழனி சாமி. ஆனால், ஆட்சி முடிவுக்கு வந்ததும், அவர் பன்னீர்செல்வத்தை கழற்றி விட்டார். கடும் கோபம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என பலமுறை வலியுறுத்திய பின்னரும், அதை ஏற்க மறுத்த பழனிசாமி, ஒரு கட்டத்தில் பா.ஜ.,வையும் கழற்றி விட்டதால், அக்கட்சி தரப்பிலும் பழனிசாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர். இருந்தபோதும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி மீண்டும் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பா.ஜ., தலைவர்கள், அதற்கு முன் அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளனர். இதற்காக பல்வேறு முயற்சிகள் பா.ஜ., தரப்பிலும் எடுக்கப்படுகின்றன. அதற்காகவே, நடிகர் ரஜினியை மறைமுகமாக களம் இறக்கி விட்டுள்ளதாக தெரிகிறது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்ட ரஜினியும் இதற்கு ஒப்புக் கொண்டே, சில காரியங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தான், சமீப காலமாக அவருடைய செயல்பாடுகள் அமைந்துள்ளன. தன் வீட்டுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை வரவழைத்து பேசிய ரஜினி, அடுத்ததாக நடிகர் சீமானை அழைத்துப் பேசினார். தற்போது, பழனிசாமிக்கு எதிர் அணியில் நிற்கும் அனைவரையும் ஜெயலலிதா வீட்டுக்கு வரவழைத்து, தீபா உள்ளிட்டோருடன் இணைந்து ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். பொறுப்பு
தமிழக அரசியலில் பா.ஜ., போட்டு கொடுத்த 'ஸ்கெட்ச்' படி நடந்து கொள்ளும் ரஜினி, அடுத்தடுத்தும் அ.தி.மு.க., தரப்பில் பலரையும் சந்தித்து பேசும் திட்டம் வைத்துஉள்ளார். பழனிசாமி முரண்டு பிடிக்கும்பட்சத்தில், அவரைத் தவிர்த்து அ.தி.மு.க.,வாகவே செயல்படும் அனைவரும் ஒன்றிணைத்து, பா.ஜ.,வோடு கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. அந்த அணியில், இன்று வரை தனித்துப் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் நடிகர் சீமானும் கூட இணையக்கூடும். தேசிய பார்வையில் செயல்படும் அனைவரையும் பா.ஜ., கூட்டணியில் கொண்டு வந்து, தமிழகத்தில் மிகப் பெரிய கூட்டணியை கட்டமைக்கும் பொறுப்பு ரஜினி வசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதி தான், ஜெயலலிதா வீட்டுக்கு ரஜினி சென்று, அங்கு ஜெயலலிதா பிறந்த தினத்தை கொண்டாடியது.இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
தர்மயுத்தம் நடத்துவது ஏன்?
ஜெயலலிதா இருந்த வரை கட்சி செழிப்பாக இருந்தது. பின்னர், அரசியல் சூது, சூழ்ச்சி, வஞ்சனை, நம்பிக்கை துரோகம் அனைத்தும் சிலரால் அரங்கேற்றப்பட்டன. அவர்களால் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட, 11 தேர்தல்களிலும் கட்சி தோல்வியே சந்தித்தது. இவை அனைத்திற்கும், ஒற்றை தலைமையே வேண்டும் என, அடம்பிடித்து ஏற்றுக்கொண்டவர் தான் காரணம். இது தொண்டர்கள் இயக்கம், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் அடிமனதில் உள்ளது. மக்களால் பெரிதும் போற்றப்படும் இயக்கமாக அ.தி.மு.க., இருந்தது. அந்த நிலை மீண்டும் வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். இதை நிறைவேற்ற நாங்கள் தர்மயுத்தம் நடத்தி வருகிறோம். -பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் -- நமது நிருபர் -