உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாலிஷ் செய்யாத பாரம்பரிய அரிசி மீது மக்கள் ஆர்வம்

பாலிஷ் செய்யாத பாரம்பரிய அரிசி மீது மக்கள் ஆர்வம்

'பாலிஷ்' செய்யாத அரிசி யை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.நம் அன்றாட உணவில் அரிசி முக்கிய இடம் பெறுகிறது. தமிழகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பயன்பாட்டில் இருந்தாலும், பளபள என வெள்ளை நிறத்தில் மின்னும் பாலிஷ் செய்த அரிசி, மக்களை கவர்ந்திழுக்கிறது. சமீபகாலமாக கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டு யாணம் உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகள் பக்கம் மக்கள் பார்வை திரும்பி உள்ளது.இவற்றை பாலிஷ் செய்தால், அசல் நிறத்தை இழந்து வெள்ளையாகின்றன. இதனால், நெல்லின் உமி எனப்படும் தோலை மட்டும் உரித்து அசல் நிறத்தில் பயன்படுத்துவதில், மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, சாமகுட்டப்பட்டி இயற்கை விவசாயி வெங்கடேஷ்பாபு கூறியதாவது:இயற்கை உரம், பூச்சி மருந்து பயன்படுத்தி, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டு யாணம், ரத்தசாளி, இலுப்பை பூ சம்பா, பூங்கார், அறுபதாம் குறுவை உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்கிறேன். இந்த நெல்லை அரிசியாக மாற்றித்தரும்படி மக்கள் கேட்டனர்.தோல் மட்டும் நீக்கப்பட்ட கருப்பு கவுனி அரிசி, கருப்பு நிறத்திலும், மாப்பிள்ளை சம்பா, காட்டு யாணம், ரத்த சாளி இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும். நெல்லை வேக வைத்து தோலை மட்டும் உரித்து பாலிஷ் செய்யாமல் விற்பதால், மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. நெல் தோலை மட்டும் உரிக்கும் இயந்திரம் என்னிடம் உள்ளது. துவக்கத்தில் நான் உற்பத்தி செய்த நெல் ரகங்களில் மட்டும் தோலை உரித்தேன். தற்போது சிவன் சம்பா, பொன்னி, துாயமல்லி, பாசுமதி போன்ற நெல் ரகங்களை, தோல் உரித்து தரும்படி விவசாயிகள், மக்கள் தேடி வருகின்றனர். ஒரு மூட்டை நெல் வேக வைக்க, 300 ரூபாய், தோல் உரிக்க, கிலோவுக்கு 7 ரூபாய் வாங்குகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.தோல் நீக்கிய பாரம்பரிய அரிசி பயன்படுத்தும் மக்கள் கூறுகையில், 'தோல் நீக்கிய பாலிஷ் செய்யாத அரிசி, வேக வைக்க கூடுதல் நேரமாகிறது. ஆனால், குறைந்த அளவு சாப்பிட்டாலும் வயிறு நிறைகிறது. மாப்பிள்ளை சம்பா, காட்டு யாணம் போன்ற அரிசியில் இட்லி, தோசை, பணியாரம் செய்தால் சுவையாக உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நன்றாக செரிமானமும் ஆகிறது' என்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நவீன விவசாய பல்கலைக்கழகம்
மார் 04, 2025 16:28

அப்படியா மக்கள் செய்றாங்க அப்படின்னா உடனே ஹைபிரைட் அரிசி பாரம்பரிய அரிசியை போலவே இருக்கும் வடிவத்தில் தயாரித்து பாரம்பரியம் 128 என்று பெயர் வைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும் முக்கியமாக அதில் சத்தே இல்லாமல் செய்தால் ஒரு மூட்டை விளைய வேண்டிய இடத்தில் 100 மூட்டை விளையும் பாரம்பரியத்தின் பெயரில் உற்பத்தியை பெருக்கலாம்


raj
மார் 04, 2025 15:48

கருப்பு கவுனி அரிசி கிலோ 330 விற்கிரார்கள். சாமானிய மக்கள் வாங்க கூடிய விலையில் விற்றால் நல்லது.


Petchi Muthu
மார் 04, 2025 11:40

இதுதான் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை