கம்பு நேப்பியர் புல்லில் இருந்து எத்தனால் தயாரிக்க ஆய்வு: வேளாண் பல்கலை இயக்குனர் தகவல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவை: “பெருகிவரும் எத்தனால் தேவையைக் கருத்தில் கொண்டு, கம்பு நேப்பியர் புல்லில் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கான ஆய்வு நடந்து வருகிறது,” என, கோவை வேளாண் பல்கலை, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் ரவிகேசவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:பெட்ரோல் விலை குறைப்பு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் விதமாக, 2025க்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2023 டிச., வரை 12 சதவீதம் என்ற இலக்கை எட்டியுள்ளோம்.எத்தனால் இரு விதங்களில் தயாரிக்கப்படுகிறது. முதலாவது கரும்பு. கரும்பின் மொலாசஸ் மற்றும் பகாஸில் இருந்து எடுக்கப்படுகிறது.அடுத்து தானியங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. உடைந்த அரிசி மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. 360 கோடி லிட்டர் தேவை
வரும் 2025ல், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் இலக்கை எட்ட 1,360 கோடி லிட்டர் எத்தனால் தேவை. தற்போது, 1,016 கோடி லிட்டர் உற்பத்தி செய்கிறோம். எனவே, இன்னும் 360 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படும்.கரும்பில் இருந்து அதிகம் எத்தனால் எடுத்தால், சர்க்கரை உற்பத்தி பாதிக்கும் என அச்சம் இருப்பதால், அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.தானியங்களைப் பொறுத்தவரை, உடைந்த அரிசியை இந்திய உணவுக் கழகம் மற்றும் வெளிச்சந்தைகளில் இருந்து வாங்கலாம்.மக்காச்சோளத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 4.26 லட்சம் எக்டரில் பயிர் செய்து, 3 லட்சம் டன் உற்பத்தி செய்கிறோம். இதில், 65 சதவீதம் கால்நடைத் தீவனத்துக்கு சென்று விடுகிறது.தமிழகத்தில், கோழிப் பண்ணைத் தொழில் பெரு வளர்ச்சி பெற்றுள்ளதால், கால்நடைத் தீவனத்துக்கு பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ம.பி.,யில் இருந்து தருவிக்கிறோம்.மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்க, கிலோவுக்கு ரூ.2 வரை ஊக்கத் தொகையாக கூடுதலாக வழங்கலாம் என, அரசு அறிவித்துள்ளது. இதனால், மக்காச்சோள விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும்.கோழிப்பண்ணை நிறுவனங்கள், மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி கேட்டுள்ளன. மாற்று வழி என்ன?
மக்காச்சோளம், அரிசி போன்ற தானியம் அல்லாமல் பயிர்களைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்க முடியுமா என, ஆய்வுகள் நடக்கின்றன.தீவனப்பயிரான கம்பு நேப்பியர் புல் மற்றும் சர்க்கரைச் சோளம் ஆகியவற்றின் தண்டில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கோவை வேளாண் பல்கலை கோ.எஸ்.எஸ்., 33 என்ற சர்க்கரைச் சோளம் ரகத்தை அறிமுகம் செய்துள்ளது.கம்பு நேப்பியர் புல்லில் இருந்து, எத்தனால் எடுப்பதற்கான ஆய்வுகள் சிறிய அளவில் நடந்து வருகின்றன. இரு பயிர்களில் இருந்தும் எத்தனால் எடுக்க முடியும் என்றாலும், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.கம்பு நேப்பியர் புல், சர்க்கரைச் சோளத்தில் இருந்து எத்தனால் எடுக்கும் ஆலைகள் நம்மிடம் இல்லை. ஆலைகள் துவக்கப்பட்டாலும், விவசாயிகள் மிக நீண்ட காலத்துக்கு, தொடர்ந்து அதிக அளவில் பயிரிட்டு வழங்க வேண்டும். ஆய்வு தொடர்கிறது
சர்க்கரைச் சோளம், கம்பு நேப்பியர் புல் ஆகியவற்றில் இருந்து மிக அதிக எத்தனால் எடுக்கும் ஆய்வு முடிவுகள் வெற்றிகரமாக அமைந்தால், விவசாயிகள் அதிகம் பயிரிடுவர். அந்த இடத்தில், எத்தனால் ஆலை அமைந்து அனைவருக்கும் பயன் கிடைக்கும்.தற்போது, எத்தனால் ஒரு லிட்டர் தயாரிக்க ரூ.7 முதல் ரூ.8 வரை செலவாகிறது. பகாஸ் மூலப்பொருளில் எடுத்தால் ரூ.23 வரை ஆகும். எத்தனாலை குறைந்த விலைக்கு எடுத்தால்தான், பெட்ரோலில் கலப்பதற்கான பயன் கிடைக்கும். குறைந்த செலவில் எத்தனால் எடுக்க, கம்பு நேப்பியர் புல் குறித்து ஆய்வைத் தொடர்கிறோம்.2013-14ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், எத்தனால் உற்பத்தி 13 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, சென்னையில் எத்தனால் ஆலைகள் துவக்கப்பட்டுள்ளன. எனவே, 2025ல் தேவையான எத்தனாலை, நம்மால் உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு, ரவிகேசவன் தெரிவித்தார்.