த.வெ.க.,விற்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்க, பழனிசாமி முன்வந்துள்ள நிலையில், இறுதிகட்ட பேச்சு விறுவிறுப்படைந்து உள்ளது. த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் அ.தி.மு.க., இறங்கியது. இதற்காக, த.வெ.க.,வைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆதரவாளர்கள் வாயிலாக கூட்டணி குறித்து இரு முறை பேச்சு நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d9rx9zzn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துணை முதல்வர் பதவி அப்போது, 117 தொகுதிகள் தர வேண்டும்; கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமானால், அமைச்சரவையில் த.வெ.க.,வுக்கு பங்கு தருவதோடு, முக்கிய இலாகாக்களை விட்டுக்கொடுக்க வேண்டும். துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை த.வெ.க., தரப்பினர், அ.தி.மு.க., தரப்புக்கு எடுத்துக் கூறினர். இதனால், அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க., தரப்பு, இந்த விஷயத்தை எப்படி கொண்டு செல்வது என புரியாமல் தவித்தது. இருந்தாலும், த.வெ.க., தரப்பின் நிபந்தனைகளை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் சொல்ல, அவரும் அதிர்ச்சி அடைந்தார். இருந்தபோதும், தங்கள் தரப்பில் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை தெளிவாக எடுத்துக் கூறிவிடுங்கள் என பழனிசாமி கூறிவிட்டார். இதையடுத்து, 'அ.தி.மு.க., தரப்பில் 20 தொகுதிகளை விட்டுக் கொடுப்போம்; கூட்டணி ஆட்சி கிடையாது. தேவையானால், தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்வோம். 'தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்றால், புது கட்சி துவங்கி இருக்கும் விஜய் தான், கூட்டணி விஷயத்தில் இறங்கி வர வேண்டும்' என, பழனிசாமி விதித்த நிபந்தனைகளை த.வெ.க., தரப்பினரிடம் தெரிவித்து விட்டனர். இதனால், இருதரப்பு பேச்சுக்குப் பின், எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது. பா.ஜ., அல்லாத அணி இந்நிலையில், த.வெ.க.,விற்கு 40 தொகுதிகள் வரை தருவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. த.வெ.க., எப்படியும் தங்கள் கூட்டணியில் இணையும் என்பதை மனதில் வைத்து தான், பழனிசாமி தன் பிரசார பயணத்தில் பேசும்போது, 'அ.தி.மு.க., கூட்டணிக்கு பெரிய கட்சி வரவுள்ளது' என கூறினார். ஆனால், 'பா.ஜ., அல்லாத கூட்டணி அமைத்தால், அதில் த.வெ.க., பங்கேற்பதில் சிரமம் இருக்காது' என, விஜய் தரப்பில் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. இதனால், இரு தரப்புக்குமான பேச்சு, அடுத்த கட்டத்தை எட்டாமல் இருப்பதாக இரு கட்சி வட்டாரங்களும் கூறின. - நமது நிருபர் -