வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 5 பேர் பழனிசாமி அணிக்கு ஓட்டம்
சென்னை: அதிருப்தி அணியில் இருந்து ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பக்கம் தாவி உள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை இல்லாத த.வெ.க., ஆட்சி அமைக்க, ஆதரவு அளிப்பது தொடர்பாக அ.தி.மு.க.,வுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சட்டசபையில் த.வெ.க., அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஓட்டெடுப்பு நடத்திய போது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்தனர். அதற்கு கைமாறாக, த.வெ.க., அமைச்சரவையில் அ.தி.மு.க., அதிருப்தி அணி எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெற போவதாக கூறப்பட்டது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இருந்து வந்த வி.சி.க., மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு, அமைச்சரவையில் இடம் கொடுத்த முதல்வர் விஜய், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி வழங்கவில்லை. இதனால், அதிருப்தி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வேலுமணி தரப்பில் இருந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்தனர். அதேபோல, ஆற்காடு எம்.எல்.ஏ., சுகுமார், சங்கரன்கோவில் திலீபன் ஜெய்சங்கர், பண்ருட்டி மோகன், காங்கேயம் நடராஜன், அந்தியூர் ஹரிபாஸ்கர் ஆகிய ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், பழனிசாமி பக்கம் தாவினர். இதை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகம் வந்த எம்.எல்.ஏ.,க்கள், ஐவரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து, புதிய மனு ஒன்றை அளித்தனர். அதில், வேலுமணி தரப்பு அணியில் நாங்கள் இல்லை. எனவே, முன்னர் நாங்கள் கொடுத்த ஆதரவு கடிதத்தை வாபஸ் பெறுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'வருத்தம் தெரிவித்தோம்'
பழனிசாமி பக்கம் சென்ற ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி: சட்டசபை அ.தி.மு.க., தலைவராக பழனிசாமியை நாங்கள் தேர்வு செய்தோம். இடையில், ஆட்சி மீதான ஓட்டெடுப்பில், சில தவறுகள் நடந்து விட்டன. அதற்கு வருத்தம் தெரிவித்து, பழனிசாமியிடம் கடிதம் கொடுத்தோம். அதன் நகலை சபாநாயகரிடம் கொடுத்தோம். இனி, நாங்கள் ஐந்து பேரும், பழனிசாமி தலைமையில் செயல்படுவோம். த.வெ.க., அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறோம். அதற்காக கடிதம் கொடுத்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மடைமாற்று அரசியலில் ஈடுபடும் த.வெ.க., அரசு
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் வெட்டி படுகொலை, மதுரை கீழமாத்துாரில், 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த, த.வெ.க., நிர்வாகி கைது, சென்னை தாம்பரம் அருகே கல்லுாரி மாணவியை, தவறான முறையில் பார்த்த த.வெ.க., நிர்வாகி கைது என வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.இதுபோக, ஆளும் கட்சியினரின் மிரட்டல், அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு தொடர்கிறது. இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியில், ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.'முதல்வர் கோட்டைக்கு வருகிறார்; கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்; ஆஹா என்ன ஒரு மாற்றம்' என, த.வெ.க.,வினர், ஒரு தனி உலகத்தை கட்டமைத்து வருகின்றனர். தி.மு.க., 'எக்ஸ்' தள மடைமாற்று அரசியலில் ஈடுபட்டது எனில், த.வெ.க., 'இன்ஸ்டாகிராம் ரீல்' மடைமாற்று அரசியலில் ஈடுபடுகிறது.தமிழகம் ரத்தக்காடாக மாறி வருவது குறித்தும், தங்கள் கட்சியினரின் அதிகார வெறியாட்டம் குறித்தும், முதல்வர் விஜய் ஒரு வார்த்தையாவது பேசுவாரா?ஓட்டளித்த தமிழக மக்கள் மீது, கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காக்க, சட்டம் -- ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை முதல்வர் விஜய் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.