காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலின் உற்சவர் சிலை செய்ததில், 8.7 கிலோ தங்கம் மோசடி தொடர்பான வழக்கு முடங்கியுள்ளதாக பக்தர்கள் குமுறுகின்றனர். வழக்கு பதிந்து எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், நீதிமன்ற விசாரணை இன்னும் துவங்காமல் இழுபறியாக உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், 33 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, டிச., 8ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கோவிலின் உற்சவர் சிலையான சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டதில் நடந்த மோசடி வழக்கு குறித்து, பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின், 1,000 ஆண்டு பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்ததால், புதிய உற்சவர் சிலை செய்ய, அறநிலையத்துறை சார்பில், கடந்த 2015ம் ஆண்டில் முடிவானது. அதன்படி, ஸ்தபதி முத்தையா வழிகாட்டுதலின்படி, புதிய சோமாஸ்கந்தர் உற்சவர், ஏலவார்குழலி அம்மன் என இரு சிலைகள், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் செய்யப்பட்டன. புதிய சிலைகள் செய்வதில், 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவில் உள்ளது. ஆனால், தங்கம் சேர்க்கப்பட்டதில் பல்வேறு சந்தேகம் எழுந்ததால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்கள் பெறப்பட்டன. அதன்படி, தங்க முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு ஆதாரங்கள் பக்தர்களுக்கு கிடைத்தன. குறிப்பாக, சிலை செய்வதற்காக, பக்தர்கள் வழங்கிய தங்கத்திற்கு ரசீது ஏதும் போடப்படவில்லை; சிலை செய்யும்போது வீடியோ, போட்டோ பதிவும் செய்யப்படவில்லை. இது போன்ற காரணங்களால், அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின்படி, சிவகாஞ்சி போலீசார், 2017ல் வழக்கு பதிந்தனர். பின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இந்த வழக்கை கையில் எடுத்தனர். இந்த வழக்கில், முத்தையா ஸ்தபதி, செயல் அலுவலர் முருகேசன், அர்ச்சகர் ராஜப்பா, செந்தில் உள்ளிட்ட ஒன்பது பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். பின்னர், அறநிலையத் துறையின் முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் 2017ல் கைது செய்யப்பட்டனர். ஐ.ஐ.டி., நிபுணர் குழு மூலம், புதிதாக செய்த உற்சவர் சிலைகளை ஆய்வு செய்ததில், துளி தங்கம் கூட சிலையில் இல்லை என, ஏ.டி.எஸ்.பி., வீரமணி அப்போது நிருபர்களிடம் கூறினார். இதனால், தங்கம் வழங்கிய பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இவ்வழக்கை கிடப்பில் போட்டதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சிவகாஞ்சி போலீசாருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், இந்த வழக்குக்கான குற்றப் பத்திரிகையை சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் விநாயகம், ஓராண்டிற்கு முன்னர் தாக்கல் செய்தார். அடுத்தகட்டமாக, நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை துவங்கவில்லை. கடந்தாண்டு நவம்பர் மாதம், கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இருந்த புதிய உற்சவர் சிலைகளை காஞ்சிபுரம் கொண்டு வந்து, நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இச்சிலை, ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை பாதுகாப்பு மையத்தில் உள்ளது. காஞ்சிபுரத்திற்கு சிலை கொண்டு வந்து, ஒரு ஆண்டுகள் ஆன நிலையில், நீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணை இன்னும் துவங்காததால், வழக்கின் விசாரணை முடக்கப்பட்டு விட்டதோ என, பக்தர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர். இது குறித்து, காஞ்சிபுரம் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்னும் இவ்வழக்கு தொடர்பாக எண் பதிவாகவில்லை. இவ்வழக்கு பற்றி விசாரித்து, பிற விபரங்களை தெரிவிக்கிறோம்' என்றார். புதிய உற்சவர் சிலையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய உலோகங்கள் தங்கம் 5 சதவீதம் வெள்ளி 1 சதவீதம் பித்தளை 12 சதவீதம் செப்பு 80 சதவீதம் ஈயம் 2 சதவீதம்-
-8.7 கிலோ தங்கம் என்னாச்சு?
சோமாஸ்கந்தர் சிலை 111 கிலோவும், ஏலவார்குழலி அம்மன் சிலை 63 கிலோ என, 174 கிலோவில் சிலைகள் புதிதாக செய்யப்பட்டுள்ளன. இதில், 5 சதவீதம் தங்கம் சேர்த்திருக்க வேண்டும். அதாவது, 8.7 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், ஐ.ஐ.டி., நிபுணர்களை கொண்டு, சிலை கடத்தல் பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்க வேல் ஆய்வு செய்ததில், சிலையில் துளி கூட தங்கம் இல்லை என்பது தெரிய வந்தது.