உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜோதிமணி உள்ளிட்ட 5 எம்.பி.,க்கள் குழு மயூரா ஜெயகுமாரிடம் விசாரிக்க எதிர்ப்பு

ஜோதிமணி உள்ளிட்ட 5 எம்.பி.,க்கள் குழு மயூரா ஜெயகுமாரிடம் விசாரிக்க எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷ்டி மோதல் விவகாரம் தொடர்பாக, ஜோதிமணி தலைமையிலான ஐந்து எம்.பி.,க்கள் குழு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் மயூரா ஜெயகுமாரிடம் விசாரணை நடத்த, அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.கடந்த மாதம் கோவையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் போட்டி பொதுக் கூட்டத்தில், மயூரா ஜெயகுமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருதரப்பு மோதல்

கட்சியின் மாவட்ட தலைவர் அனுமதி இல்லாமல் போட்டி கூட்டம் நடத்தியது, கட்சி விரோத செயல் என, டில்லி மேலிடத்தில் மயூரா ஜெயகுமார் புகார் தெரிவித்தார்.காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், கேரளாவில் இருந்து டில்லி திரும்ப, கோவை விமான நிலையம் வந்த போது, மயூரா ஜெயகுமார் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க நிர்வாகி கோவை செல்வம் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் வரவேற்கச் சென்றன. அப்போது, இரு தரப்பினரும் வேணுகோபாலிடம் மாறி மாறி புகார் தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.இது குறித்து, கோவை போலீஸ் கமிஷனரிடம், கோவை செல்வம் தரப்பில் புகார் மனு அளிக்க, மயூரா ஜெயகுமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விசாரிக்க, எம்.பி.,க்கள் ஜோதிமணி, சுதா, கோபிநாத், ராபர்ட் புரூஸ், சசிகாந்த் செந்தில் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினர் சமீபத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனில், கோவை செல்வம் உட்பட கோவை காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். ஆனால், மயூரா ஜெயகுமாரிடம் விசாரணை நடத்த, அகில இந்திய காங்கிரஸ் ஒழுங்கு கமிட்டிக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறி, அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவை செல்வம் ஏற்கனவே இளங்கோவன் தலைவராக இருந்த போது, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். எனவே, அவரது புகார் மனு மீது எந்த விசாரணையும் நடத்தக்கூடாது என்றும், டில்லி மேலிடத்திற்கு மயூரா ஜெயகுமாரின் ஆதரவாளர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

விதிகளுக்கு புறம்பாக

இது குறித்து, தமிழக காங்கிரஸ் துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி அறிக்கை:சத்தியமூர்த்தி பவனில், ஐந்து எம்.பி.,க்கள் குழு விசாரணை நடத்தியதாக அறிந்தேன். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மட்டும் தான், அகில இந்திய நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு வந்தால், விசாரணை நடத்த முடியும். தமிழகத்தில், கே.ஆர்.ராமசாமி தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் சிறப்பாக செயல்பட்டாலும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளை அவர்கள் விசாரிக்க முடியாது. மாநிலத்தில் உள்ள அணிகளின் நிர்வாகிகள் மற்றும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் தான், தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்க முடியும். அவர்களில் யாரேனும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக இருந்தால், அகில இந்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு தான் பரிந்துரை செய்ய முடியும். காங்கிரஸ் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக விசாரணை நடத்தப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. விதிமுறைகளுக்கு மாறாக நடவடிக்கை எடுக்க முனைவது, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை