பொறியாளர்களுக்கு சவால் விடும் கற்கோட்டை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கர்நாடகாவின் முக்கிய மாவட்டங்களில் ஒன்று, சித்ரதுர்கா. இம்மாவட்டத்தில் கோட்டை, அணை, கோவில் உட்பட, பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன.மாண்டியா மாவட்டம் 'சர்க்கரை நாடு', மைசூரு 'அரண்மனை நகர்', பெங்களூரு 'சிலிகான் சிட்டி', ராம்நகர் 'பட்டு நகர்' என, கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு சிறப்பு பெயரால் அழைக்கப்படுகின்றன. அதேபோன்று சித்ரதுர்கா, 'கோட்டை மாவட்டம்' என, பிரசித்தி பெற்றுள்ளது.சித்ரதுர்காவில் உள்ள கற்கோட்டை, 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். பாளையக்காரர்களின் ஆட்சி திறனுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.கோட்டைக்குள் திருட்டுத்தனமாக ஊடுருவ முயற்சித்த எதிரி படையினரை, உலக்கையால் அடித்து விரட்டி, வீரமரணம் அடைந்த ஒபவ்வாவின் வீரத்துக்கு சான்றாக, இக்கோட்டை திகழ்கிறது.சித்ரதுர்காவுக்கு வரும் சுற்றுலா பயணியர், உறவினர் வீடுகளுக்கு வரும் விருந்தினர்கள், கோட்டையை மறப்பது இல்லை. இக்கோட்டை கிரானைட் போன்ற வலுவான கற்களில் கட்டப்பட்டதாகும். இதை இரும்பு கோட்டை என்றும் அழைக்கின்றனர். இன்றைய பொறியாளர்களுக்கு சவால் விடும் வகையில் வலுவாக உள்ளது.உயரமான மலை மீது, கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதை சுற்றிலும் நீர் நிலைகள் உள்ளன. கோட்டையை கட்ட ராஷ்ட்ர கூடர்கள், சாளுக்கியர்கள், நாயக்கர்கள் உதவி செய்தனர். ஏழு சுவர்களின் நடுவே கட்டப்பட்டதாகும். 18 புராதன கோவில்கள், கிடங்குகள் என, பல்வேறு கட்டடங்களை காணலாம். குறிப்பாக ஹிடிம்பேஸ்வரா கோவில், மிகவும் பெரியதாகும்.இக்கோட்டை பெங்களூரில் இருந்து, 200 கி.மீ.,யிலும்; ஹம்பியில் இருந்து 120 கி.மீ., தொலைவிலும் உள்ளது.- நமது நிருபர் -பசுமையான மலைகளுக்கு இடையே, வாணி விலாஸ் அணையின் அழகு மிகவும் அற்புதமானது. அணை மீது நின்று சுற்றி பார்த்தால், 'பச்சை பசேல்' என்ற இயற்கை காட்சிகளை காணலாம்.பாக்கு, தென்னை தோட்டங்களை ரசிக்கலாம். அணையின் ஒரு ஓரத்தில் நின்று பார்த்தால், இந்திய வரைபடத்தை போன்ற வடிவத்தை காணலாம்.சூரிய அஸ்தமனம் மற்றொரு சிறப்பு. அணையின் இடது புறம் உத்தரிகுட்டா, வலது புறம் சத்தரிகுட்டா மலைகளுக்கு இடையே, சூரியன் மறையும் அற்புதமான காட்சியை ரசிக்கலாம்.சித்ரதுர்கா ஹிரியூரின் வாணி விலாஸ்புரா அருகில் வேதவதி ஆற்றுக்கு குறுக்கே, 1907ல் மைசூரின் கிருஷ்ணராஜ உடையார் அணையை கட்டினார். சிக்கமங்களூரு மாவட்டத்தின், பாபா புடன் கிரி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் 'வேதா' ஆறு, கடூர் அருகில், 'அவதி' என்ற பெயரில், வேதாவதி நதியாக பாய்கிறது.
எப்படி செல்வது?
ஹிரியூர் நகரில் இருந்து, ஹொசதுர்கா சாலை வழியாக, 18 கி.மீ., துாரம் சென்றால், இடது புறத்தில் வாணி விலாஸ் அணை உள்ளது. பெங்களூரு, துமகூரில் இருந்து வந்தாலும், ஹிரியூர் வழியாக அணைக்கு செல்லலாம். ஹூப்பள்ளி, தாவணகெரேவில் இருந்து, சித்ரதுர்கா தேசிய நெடுஞ்சாலை 4ன் வழியாக வந்து, வி.வி.புரா கிராஸ் வாயிலாக அணையை அடையலாம். முக்கிய நகரங்களில் இருந்து, ஹிரியூருக்கு அரசு, தனியார் வாகன வசதி உள்ளது. ரயில்களும் இயக்கப்படுகின்றன. தனியார் வாகனங்களும் இயக்கப்படுகின்றன. - நமது நிருபர் -