உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவை மேம்பாலம் கட்டியதில் கும்மாங்குத்து; அ.தி.மு.க., - தி.மு.க., அரசியல் சண்டை

கோவை மேம்பாலம் கட்டியதில் கும்மாங்குத்து; அ.தி.மு.க., - தி.மு.க., அரசியல் சண்டை

கோவை : ''கோவையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத் துக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் தான்1,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது,'' என, முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். கோவையில் 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜி.டி.நாயுடுவின் பெயரிட்டு, நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இத்திட்டத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க., ஆட்சி என கூறி, அதை கொண்டாடும் வகையில், கட்சியினருக்கும், மக்களுக்கும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், நேற்று இனிப்பு வழங்கினர். முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், அருண்குமார், ஜெயராம், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி உள்ளிட்டோர், கோவை உப்பிலிபாளையத்தில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு, கோல்டுவின்ஸ் வரை புதிய மேம்பாலத்தில் பயணித்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்து, கொண்டாடினர். அங்கிருந்த மக்களுக்கு ஜிலேபி, லட்டு வழங்கினர்.

வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்துக்கு 50 ஆண்டு வளர்ச்சியை, பழனிசாமி முதல்வராக இருந்தபோது தந்தார். கேட்ட திட்டங்களை வாரி வழங்கினார். அவிநாசி ரோட்டில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்த, அ.தி.மு.க., அரசு, 2020 மார்ச்சில் 1,600 கோடி ருபாயை முழுமையாக ஒதுக்கியது; 55 சதவீத பணிகளை ஆட்சி காலத்திலேயே முடித்து விட்டோம். உக்கடம் - ஆத்துப்பாலம், காந்திபுரத்தில் இரண்டடுக்கு மேம்பாலம், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, இருகூர், பீளமேடு, டெக்ஸ்டூல், ஆவாரம்பாளையம் போன்ற இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. ரோடுகள் மேம்படுத்தப்பட்டன. பாலங்கள் அனைத்தும் அ.தி.மு.க., ஆட்சி காலத்தையே நினைவுபடுத்தும். புதிய பாலத்துக்கு, ஜி.டி.நாயுடுவின் பெயரை வைத்ததை வரவேற்கிறோம். தி.மு.க., நான்கரை ஆண்டுகளாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வந்து, விடுபட்ட திட்டங்களை நிறைவேற்றுவார். நாங்கள் திட்டமிட்டு முடுக்கிவிட்ட திட்டங்களையெல்லாம், தன் அட்சியில் தான் செய்தது போல ஸ்டாலின், தனக்கு தானே பெருமை பேசி வருகிறார். அதாவது - - சினிமா பட வசனம் போல, மாப்பிள்ளை இவருதான்... ஆனா, சட்டை எங்களுது. வேற எப்படி சொல்றது? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ