மதுரை: எம்.ஜி.ஆர் ., உருவாக்கிய அ.தி.மு.க., தன் பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒருவரால், அபகரிப்பு தி.மு.க., வாக மாறி விட்டது என மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் இணைந்த விழாவில் பன்னீர் செல்வம் பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=28sll0bs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில், நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கொண்ட கொள்கைக்கு நேர்மையாகவும், கொடுத்த பணிக்கு மனசாட்சியுடனும், நன்றியுடனும் பணியாற்றியுள்ளேன். ஸ்டாலினிடம் அம்மாவின் அன்பு அ.தி.மு.க., வின் 'தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்' என்ற எம்.ஜி.ஆரின் திருத்தக்கூடாதவிதி திருத்தப்பட்டது. எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெயலலிதா வழிநடத்திய அ.தி.மு.க., இன்று இல்லை. எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., தன் பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒருவரால், 'அபகரிப்பு தி.மு.க.,' வாக மாறி விட்டது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க சட்டப்போராட்டத்தை நடத்தினேன். தலைமைக்கு உண்மையாக உழைத்ததற்காக,குறுக்கு வழியில் வந்தவர்களால் நான் எப்படியெல்லாம் பழிவாங்கப்பட்டேன் என்பது எல்லாருக்கும் தெரியும். அப்படி பழிவாங்கப்பட்ட என்னை, அன்போடு அரவணைத்து அம்மாவின் அன்பை எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் வழங்கி கரம் பிடித்து வழிகாட்டிய தலைவர் முதல்வர் ஸ்டாலின். சட்டத்தை வளைத்து திட்டம் போடலாம்; கழக சட்டவிதியை மாற்றி வட்டமும் போடலாம்; தொண்டர்களின் உரிமையை பறித்துவிட்டு தொண்டை கிழிய கத்தலாம்; கட்சியை கைப்பற்றலாம்; ஆனால் வெற்றி பெற முடியுமா என்றால், இல்லை. அண்ணா தி.மு.க., இன்று அபகரிப்பு தி.மு.க., வாக மாறியிருக்கிறது. இனியும் அதில் பயணிப்பது திராவிடத்திற்கு மாறானது. அ.திமு.க., உரிமை மீட்பு கழகத்தை 'அண்ணா கண்ட' தி.மு.க.,வில் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்றார் அண்ணாதுரை; அதை அப்படியே ஏற்று முதல்வர் ஸ்டாலின் என்னையும், என்னுடன் பயணிப்பவர்களையும் தாயுள்ளத்துடன் ஏற்றார். ஈ.வெ.ரா., வின் சுயமரியாதையையும், அண்ணாதுரையின் அறிவையும், கருணாநிதியின் தமிழ் பற்றையும், அரசியல் ஞானத்தையும்,ஜெயலலிதாவின் விவேகத்தையும் ஒருங்கே பெற்றவர் முதல்வர் ஸ்டாலின். இவரைப்போல் இந்தியாவில் இல்லை நம்முடைய இணைப்பு சிலருக்கு வெறுப்பை தந்திருக்கிறது; சிலருக்கு துாக்கத்தை கெடுத்திருக்கிறது. எதிரணியினரின் வெற்றிவாய்ப்பை முற்றிலுமாக தடுத்ததற்கு, மூலகாரணமாக இருப்பவர்; கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரிகளே இல்லை என்பதை நடைமுறைப்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின்;பதறாத பண்பாளர்; சிதறாத சிந்தனையாளர்; கட்சியை மட்டுமல்ல, ஆட்சியையும் சரி,தோழமைக் கட்சிகளை மாண்போடு நடத்துவதிலும் சரி இவரைப்போல பக்குவம் கொண்ட தலைவர் இந்தியாவிலேயே இல்லை. என்வாழ்நாளில் திராவிட கொள்கைகளை உயிர்மூச்சாக கடைபிடித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்படுவேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் அரியணையில் ஸ்டாலினை அமர்த்திட,தேர்தலில் உறங்காமல் களப்பணி ஆற்றி வெற்றிக்கனியை சமர்ப்பிக்க சபதம் ஏற்போம். இவ்வாறு பேசினார்.