சென்னை : தி.மு.க. அரசின் தோல்விகளை மறைக்க, தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் ஸ்டாலின் பூச்சாண்டி காட்டுவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:
தமிழகம் இதுவரை கண்டிராத, மிகவும் அநியாயமான, ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியை வழி நடத்தும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், 'நியாயமான தொகுதி மறுவரையறை' குறித்து பேசுகிறார். முதலை கண்ணீர்
முதலில் அவர், 'டாஸ்மாக்' கொள்ளையை, போதைப்பொருள் மாபியாவை, சட்டவிரோத மதுபானத்தை, ரவுடியிசத்தை, தி.மு.க., அமைச்சர்களின் ஊழலை, தி.மு.க., தலைமை குடும்பத்தின் ஆணவத்தை, அவர்களின் தமிழகத்தின் மீதான பிடியை பற்றி பேச வேண்டும்.ஒவ்வொரு தமிழரின் முன்பாகவும் நான் சபதம் செய்கிறேன். லோக்சபாவில் பிரதிநிதித்துவம் குறைக்கப்படவோ அல்லது தமிழகத்தின் குரல் அடக்கப்படவோ, நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வரும் 2027 அல்லது தொகுதி மறுவரையறை எப்போது வந்தாலும், மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும் அ.தி.மு.க., தமிழகத்தின் உரிமை குரலையும், எதிர்காலத்தையும் சிறப்பாக பாதுகாக்கும். தி.மு.க., அரசின் தோல்விகளையும், மோசடிகளையும் மறைக்க, இது போன்ற கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களை பயன்படுத்துவதை, முதல்வர் ஸ்டாலின் நிறுத்த வேண்டும். முதல்வரின் நாடகத்தாலும், முதலை கண்ணீராலும் தமிழக மக்கள் சோர்வடைந்து விட்டனர்.'அன்னைக்கி காலையில 6:00 மணி இருக்கும்' என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது, லோக்சபா தொகுதி மறுவரையறை குறித்த முதல்வர் ஸ்டாலினின் அறிக்கை. தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும், அதில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோதே தெரிவித்தேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பூச்சாண்டி வேலை
தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாகத் தான் இருக்கும். கூட்டணி அறிவிக்கையின்போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை. இன்னும் வராத ஒன்றை, 'புலி வருது புலி வருது' என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்.தன் ஆட்சியின் அவலங்களை, இதை வைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான 'கோல் போஸ்ட்' மாற்றும் அரசியலை, தமிழக மக்கள் இனியும் நம்பப்போவது இல்லை.உண்மையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்தோ, ஹிந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் தமிழக மக்கள் இருக்கின்றனர். எனவே, மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, தி.மு.க., ஆட்சியில் நடக்கும் ரவுடியிசத்தையும், திருட்டுகளையும், உருட்டுக்களால் அல்லாமல் களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.