கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இந்த தேர்தல், 2026 மார்ச் அல்லது ஏப்ரலில் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பதால், ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதிருப்தி கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எப்., எனப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. வயநாடு நிலச்சரிவு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளால் அதிருப்தி அலை வீசுகிறது. இதனால், கேரளாவில் தற்போது ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையே மக்களிடம் மேலோங்கி உள்ளது. இந்தச் சூழலில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால், அது ஆளுங்கட்சிக்கு அக்னி பரீட்சையாகவே அமையும். ஆளுங்கட்சிக்கு எதிரான இந்த மனநிலையை பயன்படுத்தி, எதிர் முகாமில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப்., எனப்படும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, வலுவான பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளது. இது, முதல்வர் பினராயி விஜயனுக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார், கேரளாவின் மூத்த அரசியல் பத்திரிகையாளரான ஜார்ஜ் பொடிபாரா. ''உள்ளாட்சி தேர்தலில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 50 சதவீத ஓட்டுகளை அள்ளும். அது, சட்டசபை தேர்தலில் அவர்கள் மெஜாரிட்டி பலம் பெறுவதற்கு கைகொடுக்கும்,'' என ஜார்ஜ் பொடிபாரா கணித்துள்ளார். பா.ஜ.,வை பொறுத்தவரை கலவையான கணிப்புகளே முன்வைக்கப் படுகின்றன. கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் பா.ஜ., மெல்ல காலுான்றி வருவது, ஆளும் எல்.டி.எப்., மற்றும் பிரதான எதிர்க்கட்சியான யு.டி.எப்., கூட்டணிக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது. மறுபுறம் திருச்சூர் தொகுதி பா.ஜ., - எம்.பி.,யான சுரேஷ் கோபி, சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரத்தில் வாய் திறக்காமல் மவுனம் காத்தது, பா.ஜ., மீது அத்தொகுதி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டு பங்கீடு எனினும், முன் எப்போதும் இல்லாத வகையில் பா.ஜ., வளர்ந்து வருவதால், உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கூட்டணி ஓட்டுகளையும், காங்., தலைமையிலான கூட்டணி ஓட்டுகளையும் கணிசமாக பிரிக்கும் என்கிறார், கேரள பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பிரபாஷ். பா.ஜ., காலுான்றிய பின், இதுவரை நடந்த தேர்தல்களில் இடதுசாரிகளின் ஓட்டுகளையே பிரித்து வந்திருக்கிறது. ஆனால், இம்முறை காங்கிரஸ் ஓட்டுகளையும் பிரிக்கும் என்பதால், அதன் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஓட்டு பங்கீடு சரியக்கூடும் என்றே கணிக்கப்படுகிறது. இதே நிலை வரும் சட்டசபை தேர்தலிலும் நீடிக்கும் பட்சத்தில், 2029 லோக்சபா தேர்தல் நிச்சயம் பா.ஜ.,வுக்கான தேர்தலாக மாற வாய்ப்பு இருக்கிறது. அதாவது, கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளை ஓரங்கட்டிவிட்டு, இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ., வளரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதனால், நடக்கப் போகும் கேரள உள்ளாட்சி தேர்தல், தேசிய அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -