உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிந்தனைக்களம்: ஹிந்துக்களுக்கு பா.ஜ., செய்யும் பச்சை துரோகம்

சிந்தனைக்களம்: ஹிந்துக்களுக்கு பா.ஜ., செய்யும் பச்சை துரோகம்

திருவாரூர் அடுத்த மஞ்சக்குடியில் அவதரித்து, உலகெங்கும் வேதாந்த, அத்வைத தத்துவங்களை எடுத்துச் சென்ற சுவாமி தயானந்த சரஸ்வதி, ஹிந்து தர்ம 'ஆச்சார்ய சபா' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதில், 200க்கும் மேற்பட்ட ஸம்ப்ரதாயங்களைச் சேர்ந்த துறவியரையும் மடாதிபதிகளையும் உறுப்பினர்களாக சேர்த்தார். இந்த அமைப்பு, ஹிந்து மக்களின் உண்மைக் குரலாக பல்வேறு விஷயங்களில் விளங்கியது.கடந்த 2012 நவம்பர் மாதம், ஆச்சார்ய சபா, ஒரு துறவியர் மாநாட்டை குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நடத்தியது. அந்த மாநாட்டில் தான், 'இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் வரவேண்டும்' என்று, சுவாமி தயானந்த சரஸ்வதி அறிவித்தார். அந்த மாநாட்டில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அவர், மூன்று முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசினார்.* கங்கை நீரை சுத்தம் செய்தல்* பசுவதை தடைச்சட்டம்* ஹிந்து கோவில்களை மாநில அரசுகள் கட்டுப்படுத்துவதை ஏற்க முடியாது; கோவில்கள் அரசிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

சொன்னது ஒன்று...

அனைத்து துறவியரின் ஆசி பெற்ற மோடி, 2014ல் பாரத பிரதமர் ஆனார். கங்கை நீரை சுத்தம் செய்யும் திட்டத்தை வேகமாக தொடங்கினார். ஆனால், இரு ஆண்டுகளுக்குப் பின் அந்த திட்டம் முக்கியத்துவம் இழந்தது.பிரச்னையை பெரிதாக்கும் வண்ணம், உத்திரகண்ட் மாநிலத்தில் பல்வேறு நதிகளை மறித்து தடுப்பணைகள் கட்டப்பட்டன. உத்திர காசியில் கங்கை நதி சீறிப்பாய்ந்து ஓடுவதே நின்று போனது. நதி நன்றாக ஓடினால் சுத்தம் செய்ய வேண்டிய தேவை பாதியாகக் குறையும்.பசுவதையை கட்டுப்படுத்த, மாடுகள் விற்பனை ஒழுங்குபடுத்தல் சம்பந்தமாக, 2017ல் மத்திய அரசு ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன் பிறகு மோடி அரசு, சத்தம் போடாமல் அந்த அறிவிக்கையை திரும்பப் பெற்றது.ஹிந்து கோயில்களின் சுதந்திர நிர்வாகம் பற்றி, மோடி அரசு, முதல் ஐந்து ஆண்டுகளிலும் சரி, இரண்டாவது ஐந்தாண்டுகளிலும் சரி வாயை திறக்கவே இல்லை. பா.ஜ.,வின் 2024 தேர்தல் அறிக்கையில் கோவில் விடுதலை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இதற்கு முன்பும் இருந்ததில்லை. சொல்லப்போனால் 2024 தேர்தல் அறிக்கையில் 'ஹிந்து' என்ற வார்த்தையே காணப்படவில்லை!ஆக, 2012ல் துறவியர் மாநாட்டில் மோடி அவர்கள் பேசிய மூன்று விஷயங்களும், அவராலேயே கைவிடப்பட்டன. அயோத்தி ராமர் கோவில் என்ற ஒரு கோவிலை மட்டும் வைத்து, தாங்கள் கோவில் பாதுகாவலர் என்ற மாயபிம்பத்தை ஹிந்துக்கள் இடையே பா.ஜ., உருவாக்கியது.மோடிக்கும் பா.ஜ.,வுக்கும் கோவில் விடுதலையில் உடன்பாடு இல்லை என்பதை, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட முக்கிய வழக்கில் பா.ஜ., எடுத்த நிலைப்பாட்டின் வாயிலாக தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர்.

வழக்கு

மேற்குறிப்பிட்ட மாநாட்டிற்குப் பின், 2012 டிசம்பரில் தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளும், மேலும் இரு துறவியரும் தமிழக, ஆந்திர, புதுச்சேரி அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவர்களது மனுவில், அந்த சட்டங்களில், ஏகப்பட்ட பிரிவுகள் அரசியல் அமைப்பு சட்டத்தின் மத சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.பல்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை மெதுவாக நகர்ந்தது, இருப்பினும் 26.10.2015 அன்றும் 13.06.2016 அன்றும் இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என, உச்ச நீதிமன்றமே இருமுறை தெரிவித்தது. இருப்பினும் வழக்கு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. பின், 20.07.2022ல், இந்த வழக்கில், அடிப்படை உரிமைகள் விஷயத்தில் வேறு வேறு நிலைப்பாடுகளை மாநில அரசுகள் எடுத்ததால், மத்திய அரசை இந்த வழக்கில் பதிலளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 18.10.2023 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இந்த வழக்கு வந்தபோது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஸ்வாமிஜி வழக்கில் தங்கள் நிலைப்பாட்டை பதிவு செய்யும் என்றார். ஆனால், கடைசி வரை எந்த பதிலும் மத்திய அரசு தாக்கல் செய்யவே இல்லை.

இருவருக்கு ஒருவர்

இறுதியாக, 01.04.2025 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு, மூத்த வழக்கறிஞர்களை இந்த வழக்கில் ஆஜர்படுத்தியது. அவர்கள் யாருக்கும் வாதம் செய்ய வேண்டிய வேலையை புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.நடராஜ் தரவே இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்னவென்று நீதிபதிகள் கேட்டவுடன், தானே மத்திய அரசு தரப்பிற்கும் சேர்த்து ஆஜராகி இருப்பதாக கே.எம்.நடராஜ் தெரிவித்தார்.அதாவது புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திர அரசுகள் சொல்வதில் நியாயம் இருக்கிறதா என்று மத்திய அரசுக்கு எழுப்பப்பட்ட கேள்விக்கு புதுச்சேரியின் வழக்கறிஞரே பதில் அளித்தார்! அவர், 'கோவில்கள் விஷயம், சட்டப்படி, மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, இந்த வழக்கை அந்தந்த மாநில உயர் நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும்' என்று வாதிட்டார். இதுவே மத்திய அரசின் கருத்து என்றும் ஆகிவிட்டது. மத்திய அரசு, தனது உரிமையையும் அதிகாரத்தையும் தெரிந்தேதான் விட்டுக்கொடுத்ததா என்பது மர்மம். இதை எதிர்த்து வாதிட்ட ஸ்வாமிஜி தரப்பினர் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் ஸ்வாமி, சாய் தீபக் ஆகியோர், 'கோவில்கள் விஷயத்தில் சட்டம் இயற்ற மத்திய அரசிற்கு முழு உரிமை உண்டு என்றும், அரசியல் நிர்ணய சட்டம் கூறுவதையும் எடுத்து உரைத்தனர். கடந்த 03.04.2001ல், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஆணித்தரமான தீர்ப்பின்படி, புதுச்சேரி அரசின் அறநிலையத்துறை சட்டத்தில் இரு முக்கிய பிரிவுகள் அடிபட்டுப் போயின.இதனால் செயல் அலுவலர், அறங்காவலர்கள் நியமனம் செய்யும் அதிகாரத்தை புதுச்சேரி அரசு இழந்தது. ஆயினும் சட்ட விரோதமாக, நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, புதுசேரி அரசு 24 வருடங்களாக கோவில்களில் கோலோச்சி வருகிறது. மேலும், புதுச்சேரி அரசு இந்த விஷயமாக செய்த மேல்முறையீடு ஸ்வாமிஜி அவர்கள் போட்ட வழக்குடன் இணைக்கப்பட்டு உள்ளது. அந்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தான் விசாரிக்க முடியும். தாங்கள் ஏற்கனவே இருமுறை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று சொன்னதுஇருப்பினும், 'இந்த வழக்கை அந்தந்த மாநில உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இப்படியாக, 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த, அரசியலமைப்பு சட்டம் தரும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தொடரப்பட்ட வழக்கு, ஏறத்தாழ, 10 நிமிடங்களில் முடிந்துவிட்டது என்று சொன்னால் மிகையாகாது. காரணம், பா.ஜ.!

விருப்பமில்லை

ஒரு யூனியன் பிரதேசத்தில் தங்கள் கூட்டணி ஆட்சியில் கோவில்கள், சட்ட விரோதமாக கட்டுப்படுத்தப்படுவதை காப்பாற்றுவதற்காக, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மகிழும் வண்ணம், 80,000 ஹிந்து கோவில்களை காவு வாங்கும் செயலை, உச்ச நீதிமன்றத்தில் 01.04.2025 அன்று கூச்சமின்றி செய்தது மத்திய அரசு. முட்டாள்கள் தினத்தில் 100 கோடி ஹிந்துக்கள், பா.ஜ.,வால் முட்டாள்கள் ஆக்கப்பட்டனர். உண்மையில், கோவில்கள் விடுதலை பெறுவதில் மத்திய பா.ஜ., அரசுக்கு சிறிதும் விருப்பமில்லை. ஆனால், அதை எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், ஹிந்து மத பாதுகாவலன் என்ற தங்கள் வேஷம் கலைந்துவிடுமே என்பதற்காகவே, தங்கள் பதிலை நீதிமன்றத்தில் பதிவு செய்யாமல் மூன்று ஆண்டுகள் இழுத்தடித்தனர். இதற்காக மத்திய அரசு தனது உரிமையை விட்டுக்கொடுக்கும்படியும் செய்தனர் என்றால், இதில் எவ்வளவு உறுதியாக இருக்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளலாம். இது ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் பச்சை துரோகம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது!- டி.ஆர்.ரமேஷ்தலைவர், ஆலய வழிபடுவோர் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

K. Prabhakaran
ஏப் 12, 2025 11:11

yes BJP has not done anything for removal of Temples from Government control. sadly mutt leaders are also keeping quiet


Abdul kasim
ஏப் 10, 2025 22:43

அட பாஜக இந்துக்களுக்கு பச்சை துரோகம் என்று தலைப்பிட்டு கோவில் சம்பந்தமான நிலைப்பாடு பற்றி இங்கே செய்தி வழங்கப்பட்டிருக்கிறது சங்கி எப்பொழுதுமே கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் மற்ற விஷயங்களுக்கு பதில் கூறுவார்கள்.


Subash BV
ஏப் 10, 2025 18:48

BASIC PROBLEM FROM AMBEDKAR CONSTITUTION. HE HAS COMMENTED ONLY ABOUT HINDU RELIGION, FURTHER ADVISED STATES TO INTERVINE. ALL VOTEBANK POLITICS. BJPS A PART OF IT. LETS WAIT AND WATCH.


Ganapathy
ஏப் 09, 2025 20:16

இஸ்லாம் தோன்றும் முன்பே இருக்கும் சிவன் கோவில்களை வஃகப் பெயரில் தனதாக்கி கொள்ளை அடிக்கலாம். இந்துசொத்துக்களை ஆட்டையபோடலாம். மொத்த ஊரையே தனதாக்கலாம். ஜனநாயகத்தில் கோர்ட்க்கு இதை கேட்க அதிகாரமில்லை. கேள்வி கேட்கும் ஹிந்துவைப் பார்த்து சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை என கூவலாம். இதுதான் இஸ்லாமிய மததீவிரவாதம். அதாவது ஹிந்துபோஃபியா.


venugopal s
ஏப் 09, 2025 18:14

பாஜக இதுவரை ஹிந்துக்களுக்கு எந்த நன்மையும் செய்தது கிடையாது என்பது தான் எல்லோருக்கும் தெரியுமே!


மாயவரம் சேகர்
ஏப் 09, 2025 13:15

பாஜகவை இந்து கட்சி இந்து தீவரவாத கட்சி என உலகம் முழுவதும் பரப்பி இந்தியாவில் முஸ்லிம்கள் கிறித்தவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என பொய்களை பரப்பி அரசியல் செய்யும் வேளையில் , அரசியல் கட்சியாக தேர்தலில் வெற்றி பெற ,பாஜக சில விஷயங்களை பேச சட்டம் இயற்ற தயங்க வேண்டிய கால கட்டாயம்.தவிர நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பல சிக்கல்களை மேலும் சிக்கலாக்குகின்றன. எல்லா மாநிலத்திலும் மத அரசியல் சிறுபான்மை வழக்குக்காக சலுகைகள் என நடக்கும்போது பாஜக கட்சி ஒன்றுதான் பாரத நாடு இந்து மதம் ஆன்மீகம் ஆகியவற்றிற்கு சட்டம் செயல்கள் மூலம் பாதுகாப்பு கொடுத்து வருகிறது.மதமாற்றம் செய்ய வரும் பணம் தடை செய்யப்பட்டுள்ளது .அதனால் பாஜகவை குறை கூறும் இந்த பதிவு கட்டுரை தேவையற்றது .மிகைப்படுத்தப்பட்டது . திரு. ரமேஷ் அவர்களின் பணி சிறந்தது என்றாலும் இது போன்ற கட்டுரைகளை பலன் தராத தவறான கருத்துக்கள் தவிர்க்க வேண்டும்


ஆரூர் ரங்
ஏப் 09, 2025 11:30

தமிழகத்தின் எண்பது சதவீத ஆலய அறங்காவலர்கள் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேயில்லை. கோயில் சொத்து ஆக்கிரமிப்பில் ஆன்மீகம் பேசும் ஹிந்துக்களுக்கும் பெரும்பங்கு உண்டு. நன்கு பராமரிக்கப்படும் ஆலயங்களில் கூட விழா நாட்கள் தவிர்த்த பெரும்பாலான நாட்களில் பக்தர்கள் எவரையும் காண முடியவில்லை. ஆக மொத்தம் ஹிந்துக்களுக்கு மதப்பற்று குறைந்து விட்டது. ஆலயம் செல்வது சாலவும் நன்று என்பதை சமுதாயம் மறைந்துவிட்டது. வட இந்தியாவில் பல ஆலயங்களின் வருமானத்தை ஆலய பண்டாக்களே எடுத்துக் கொண்டு சுக வாழ்வு வாழ்கிறார்கள். இதற்கெல்லாம் மத்திய அரசா காரணம்?. திருந்த வேண்டியது ஹிந்து மக்களே.


Senthil
ஏப் 10, 2025 21:10

ஹிந்து மக்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள், திருந்த வேண்டியது இந்த வழக்கை தொடுத்தவர்கள்தான். ஒவ்வொரு கோயிலும் அப்பகுதியில் வாழும் மக்களிடமிருந்து பெறப்பட்ட பொருளைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது, நிர்வகிக்கப்படுகிறது.


srinivasan
ஏப் 09, 2025 10:03

கோயில்களில் அரசு தலையீட்டை குறைக்க முயற்சி செய்தால் நாங்கள் மாநில உரிமை பறிபோகிறது என்போம். எங்கள் கொள்ளையை தடுக்க ஒன்றிய அரசின் அதிகாரப் போக்கு என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போடுவோம் 20 வருடங்கள் கழித்து தீர்ப்பு வரும் போது ஒரு கோவில் கூடஇருக்காது


Haja Kuthubdeen
ஏப் 09, 2025 11:30

கோவில்களில் அரசு தலையீடு இருக்கக் கூடாது..ஆனால் சிறுபாண்மை மக்களை பாதிக்கும் அனைத்து விசயத்திலும் அரசு தலையிடனும்...அதான் ஹிந்துத்வாவா!!!


ஆரூர் ரங்
ஏப் 09, 2025 09:33

கங்கைக் கரையில் ஏராளமான நகரங்களும் கிராமங்களும் குப்பைகளை கொட்டு கின்றன. கழிவு நீரையும் கலக்கின்றன. பல்லாயிரம் ஏக்கர் ஆற்றில் கரைகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு. இது நூற்றாண்டு கால சீரழிவு. முழுமையாக தூய்மைப்படுத்த பத்தாண்டுகளுக்கு மேலாகும். அரசின் முயற்சிகளுக்கு கைகொடுக்க இயலாவிட்டால் சும்மா இருங்கள்.


ஆரூர் ரங்
ஏப் 09, 2025 09:29

பசுவதைத் தடையால் முதிய பசுக்களை பராமரிக்க முடியாத ஏழை விவசாயிகள் அவற்றை அனாதையாக விட்டு விடுகின்றனர். அவை மற்றவர்களின் வயல்களில் மேய்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போதுமான( லட்சம்?)கோசாலைகளமைக்கப்படும் வரை சட்டத்தை அமல்படுத்த முடியாது.


Haja Kuthubdeen
ஏப் 09, 2025 10:33

முதிய பசுக்கள் என்று சப்பை கட்டா!!!நல்ல ஆரோக்கியமான பசுக்கள் கன்றுகள் ஊர்முழுதும் கடைத்தெருக்களிலும் வயல்களிலும் இஸ்டம் போல் சுற்றி திரிவதை ஏன் மறைக்கிறீர்.முன்பெல்லாம் ஒவ்வோர் வீட்டிலும் மாட்டு கொட்டகை இருக்குக்கும்.இப்ப தீனி போட செவாகுதுன்னு பாலை மட்டும் கறந்து கொண்டு தெருவில் மேய விட்டு விடுகிறார்கள்.இதான் எதார்த்தம்


Haja Kuthubdeen
ஏப் 09, 2025 10:36

அரசு ..பிரதமர் சொல்ல வேண்டிய விசயம் கொள்கைகளை எல்லாம் பிஜெபி காரய்ங்க நமக்கு சொல்லி கொடுக்குறாய்ங்களே..


சமீபத்திய செய்தி