உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிறிய வகை கடைகளுக்கும் தொழில் உரிமம் கட்டாயம்; காஞ்சி மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

சிறிய வகை கடைகளுக்கும் தொழில் உரிமம் கட்டாயம்; காஞ்சி மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: தமிழகத்தில் உள்ள மாநகராட்சியில் செயல்படும் திரையரங்கு, அரிசி ஆலை, ஜவுளி, மளிகை கடை, இயந்திரங்களை கொண்டு செயல்படும் தொழிற்சாலைகள் போன்றவை, மாநகராட்சி நிர்வாகத்திடம் தொழில் உரிமம் பெற வேண்டும்.இதுபோன்று பெரிய அளவிலான வியாபாரம் மேற்கொள்வோரிடம், ஆண்டுதோறும் தொழில் உரிம கட்டணமாக, 700 - 3,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.ஆனால், பெட்டி கடை, இறைச்சி கடை, உணவு பொருட்கள் விற்பனை, பால் பொருட்கள் விற்பனை, டெய்லர் கடை, மருந்து கடை என, சிறிய அளவிலான கடைகள், வியாபாரம் செய்வோர் தொழில் உரிமம் பெற வேண்டிய கட்டாயம் இதுவரை இல்லை.இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில், அனைத்து வகையான தொழில் புரிவோர், தொழில் உரிமம் பெறுவது கட்டாயம் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.இது தொடர்பாக, கடந்த நவம்பர் மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், தொழில் உரிமம் பெறுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனரகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.

190 வகை தொழில்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 3,000 பேர் தொழில் வரி செலுத்துகின்றனர். ஆனால், 1,000 பேர் மட்டுமே தொழில் உரிமம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 2,000 பேர் உரிமம் பெறாமல் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றனர்.உள்ளாட்சி விதிகளில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால், மீதமுள்ள 2,000 பேர் உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.மாநகராட்சி நிர்வாகத்திற்கு, ஓராண்டுக்கு தொழில் உரிமம் வாயிலாக, 12 லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்து வந்தது. இந்த புதிய நடவடிக்கையால், நான்கு மடங்கு உயர்ந்து, 48 லட்சம் ரூபாய்க்கும் மேலாக வருவாய் கிடைக்கும்.புதிய விதிகளின்படி, மருந்து, பால், பெட்டி, ரசாயனம், நாட்டு மருந்து கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகள், கேபிள் டிவி சேவைகள், சலுான், மரம் அறுக்கும் ஆலைகள், பேன்சி ஸ்டோர் என, 190 வகையான தொழில்களுக்கு தொழில் உரிமம் கட்டாயமாகிறது. இவர்கள், ஆண்டுதோறும் முறையாக தொழில் உரிமம் கட்ட வேண்டும்.தொழிற்சாலைகள் வகைப்பாட்டில், உரிம கட்டணம் நான்கு வகையாக விதிக்கப்பட உள்ளது. குறு, சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் 2,500 முதல் 40,000 ரூபாய் வரை விதிக்கப்பட உள்ளது.அதேபோல், பெட்டி கடைகள், டெய்லர் கடை, சலுான், ஜெராக்ஸ் போன்ற சிறிய ரக கடைகளுக்கு, 800 - 3,000 ரூபாய் விதிக்கப்பட உள்ளது.இது தொடர்பாக, கடந்த நவம்பர் மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், தொழில் உரிமம் பெறுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனரகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.அதன் அனுமதி கிடைத்தவுடன், அனைவருக்கும் 'நோட்டீஸ்' வழங்கி, தொழில் உரிமம் பெறுவதற்கான நடவடிக்கை உடனடியாக அமல்படுத்தப்படும்.

எதிர்பார்ப்பு

ஆதார், ஜி.எஸ்.டி., பான் அட்டை, வரி ரசீது, வாடகை பத்திரம் போன்ற ஆவணங்களுடன், மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி, தொழில் உரிமம் பெறலாம்.தொழில் உரிமம் பெறாமல், எந்த ஒரு தொழிலும் மாநகராட்சியில் மேற்கொள்ள கண்டிப்பாக அனுமதிக்கமாட்டோம். உரிமம் பெறாமல் தொழில் புரியும் கடைக்கு, 'சீல்' வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து, தொழில் உரிமத்தை கட்டாயமாக்கும் நடவடிக்கையில், காஞ்சிபுரம் மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது. இதேபோல், மற்ற மாநகராட்சிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு எதிர்பார்க்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
டிச 26, 2024 08:05

எவ்வளவுதான் வரி வாடகை என போட்டு கொள்ளையடித்தாலும் அரசியல்வியாதிகளின் சொத்துக்கள்தான் உயருகிறது மற்றபடி வளர்ச்சிதிட்டங்கள் அதோகதிதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை