உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை: முடிவெடுப்பதில் சித்தராமையா குழப்பம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை: முடிவெடுப்பதில் சித்தராமையா குழப்பம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதால், ஒரு வாரத்துக்கு முதல்வர் சித்தராமையா தள்ளி வைத்துள்ளார்.சித்தராமையா, முதன் முறையாக முதல்வராக பதவியேற்ற போது, 2014ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காந்தராஜ் கமிஷனை அமைத்தார். அவரது பதவி காலம் முடிந்தும் அறிக்கை தயாரிக்கவில்லை. பின், 2018 ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், குமாரசாமி முதல்வராக இருந்த போது, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை குமாரசாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இரண்டாவது முறையாக சித்தராமையா முதல்வரான பின், ஜெயபிரகாஷ் ஹெக்டே, இதன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., ஷாமனுார் சிவசங்கரப்பா உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், முழு அறிக்கையையும் சமர்ப்பிக்கும்படி முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை, ஜெயபிரகாஷ் ஹெக்டே தாக்கல் செய்தார். இந்த அறிக்கைக்கு அக்., 18ம் தேதி அமைச்சரவையில் விவாதித்து ஒப்புதல் பெறப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.தினமும் பல தலைவர்கள் சித்தராமையாவை சந்தித்தும், மொபைல் போனில் தொடர்பு கொண்டும் அறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்த, மேலிட தலைவர்களின் உதவியை முதல்வர் நாடியுள்ளார். இதையடுத்தே, சில மேலிட தலைவர்கள் பெங்களூரு வந்துள்ளனர். எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களை சந்தித்து, அறிக்கையை வெளியிடுவதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளதாக தெரிகிறது.இதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால் வரும் 18ல் நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டத்தை, 25ம் தேதிக்கு முதல்வர் சித்தராமையா ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை