காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு இடையே நான்கு வழிச்சாலையை, 654 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியை குறித்த காலத்தில் முடிக்காமல் இழுத்தடித்த நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக ரத்து செய்தது. விடுபட்ட பணிகளை விரைவுபடுத்தும் வகையில் மறு டெண்டர் கோரிய ஆணையம், புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, பணிகளை உடனே துவக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம், -பொன்னேரிக்கரை, பாலுசெட்டிசத்திரம் உள்ளிட்ட பிரதான சந்திப்பு கடவுப்பாதைகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், விபத்துகள் ஏற்பட்டு வந்தன. விபத்தை தவிர்க்க, சென்னை - பெங்களூரு தேசிய நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்ததேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.இதற்காக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டது. இதன்படி, மதுரவாயல்- - ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம், 2024 மார்ச்சில் பணிகளை முடிக்க வேண்டும்.அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., துாரம், 2024 டிசம்பரில் முடிக்க வேண்டும். காரப்பேட்டை - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம், 2024 அக்டோபரில் முடிக்க வேண்டும். ஆனால், 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள், கால அவகாசம் நிறைவடைந்தும் முடிக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் - ஒரகடம் கூட்டுச்சாலையில், மேம்பால கட்டுமான பணிகள் இன்னும் துவக்கவில்லை. சின்னையன்சத்திரம், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட இடங்களில் பணிகள் முடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் ஏனாத்துார், ராஜகுளம், சின்னையன்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.இதை கருத்தில் கொண்டு, பழைய டெண்டரை, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரத்து செய்து, புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்துள்ளது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 57 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 17 கி.மீ., சாலை பணிகளை நிறைவு செய்வதற்கு மறுடெண்டர் விட்டுள்ளோம். புதிய ஒப்பந்தம் எடுத்தவர், ஜனவரி இறுதிக்குள் கட்டுமான பணிகளை துவக்குவார். விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மைசூர் அதிவிரைவு ரயில் வழித்தடம்: 32 கிராமங்களில் நிலம் எடுக்க முடிவு
சென்னை - மைசூர் இடையே அதிவிரைவு ரயில் வழித்தடம் அமைக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 32 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த, ரயில்வே கழகத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். சென்னை - பெங்களூருக்கு, மூன்று மணி நேரத்தில் சென்றடையும் வகையில் அதிவிரைவு சாலை அமைக்கும் பணி, நான்கு பிரிவுகளாக நடந்து வருகின்றன. அதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து பரந்துார் விமான நிலையம் வரை, மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. இதையடுத்து, சென்னை - பெங்களூரு - மைசூரு இடையே, அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வழித்தடத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் ஆகிய தாலுகாக்களில், 32 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, காஞ்சிபுரம் கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ள அதிவிரைவு ரயில் கழகம், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் விளைநிலங்கள், வீடுகள், அவர்களின் வாழ்வாதாரம் குறித்து தகவல் கேட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், எந்தெந்த கிராமங்களில், எவ்வளவு சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது என, வகைப்படுத்தும் பணியை துவக்கியுள்ளது.