உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்காமல் தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாக புகார்

அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்காமல் தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாக புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்லியல் அகழாய்வு நடந்த அழகன்குளத்தில், அருங்காட்சியகம் அமைக்க தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும், தமிழக அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது.அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க, 2024ல் இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தொல்லியல் துறையினர் தெரிவித்த நிலையில், இன்று வரை அதற்கான பணிகள் நடக்கவில்லை. அழகன்குளத்தில் கிடைத்த பொருட்கள், திருப்புவனம் கீழடியில் கிடைத்ததை விட தொன்மை வாய்ந்தவை. இவற்றை காட்சிப்படுத்தவும், அரசு இன்று வரை முன்வரவில்லை. தமிழகத்தில் தான் முதன் முதலில் இரும்பு பயன்படுத்தினர். இதன் காலம் மிகவும் பழமையானது என்று, சிவகளையில் கிடைத்த பொருட்களின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரம் கீழடியை தவிர, வேறு தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்ட இடங்கள் குறித்து, அரசு ஏன் அக்கறை காட்டவில்லை என்று தொல்லியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வெளியிடவில்லை

அழகன்குளம் பழமையான துறைமுக நகரமாகவும், வெளிநாட்டு தொடர்புகள் அதிகம் கொண்டதாகவும் இருந்துள்ளது. தமிழக தொல்லியல் துறையால் இங்கு எட்டு கட்ட அகழாய்வுகள் நடந்தன. மருங்கூர் பட்டினம் என்றழைக்கப்பட்ட ஊர் அழகன்குளம். பழமையான பாண்டியர் கால துறைமுகம். சங்க இலக்கியங்களான அகநானுாறு, நற்றிணை, மதுரை காஞ்சி ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. அழகன்குளத்தில், 1986- - 87ல் அகழாய்வு பணி துவங்கியது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கி.மு., 400 முதல் கி.பி., 500 வரையிலான காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டவை.

13,000 பொருட்கள்

இவற்றை, 'கார்பன் சி 14' முறையில் பரிசோதனை செய்ததில், 2,360 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. 2,400 ஆண்டுகளுக்கு முன் சிறந்த துறைமுக நகரமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. இங்கிருந்து பாண்டியர்கள் காலத்தில் ரோமானியர்கள், எகிப்தியர், ஈழத்தில் இருந்த மாந்தை துறைமுகத்துடன் தொடர்பு கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இப்பகுதியில் பாண்டியர் கால காசு, வேலன்டைன் மன்னரால் வெளியிடப்பட்ட காசு, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் உருவங்கள், கல்மணி, சங்கு வளையல்கள் என, 13,000 பொருட்கள், 8ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டன.தொல்லியல் துறை இயக்குநர் நடன காசிநாதன், 1992ல் அழகன்குளம் முதற்கட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். தொல்லியல் துறையின் சிறப்பு ஆணையர் ஸ்ரீதர், 'அழகன்குளம் ஆன் ஏன்சியன்ட் போர்ட்' என்ற தலைப்பில் 2005ல் புத்தகம் வெளியிட்டுள்ளார்.

என்னாச்சு?

கடந்த 2017- - 18ல் நடந்த அகழாய்வு குறித்து, எட்டு ஆண்டுகளாகியும் அறிக்கை வெளியிடப்படவில்லை. அழகன்குளத்தில் மட்டுமே, 33 ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவித்து விட்டு, அப்புறப்படுத்தப்பட்டன. இன்று வரை அருங்காட்சியகம் அமைத்து பொருட்களை காட்சிப்படுத்தும் பணிகளை துவக்கவில்லை. 2024ல் முதல்வர், அமைச்சர், அதிகாரிகளுக்கு மனு அனுப்பிய பின், அழகன்குளம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. சட்டசபையிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து அழகன்குளம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

பழமையானது

தொல்லியல் ஆர்வலர் எம்.ஏ.அபுசாலிகு, ''கடல் வணிக நகரமாக அழகன்குளம் இருந்துள்ளது. பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிக தொடர்பில் இருந்துள்ளனர். கீழடியை விட தொன்மை வாய்ந்த, 13,000க்கும் மேற்பட்ட பொருட்கள் அழகன்குளத்தில் கிடைத்துஉள்ளன,'' என்றார். மதுரை எம்.பி., வெங்கடேசனும், ''கீழடியை காட்டிலும் தொன்மை வாய்ந்தது அழகன்குளம். அதற்கு ஏன் முக்கியத்துவம் தரவில்லை. அழகன்குளத்தில் மேலும் அகழாய்வு தொடர வேண்டும். அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ManiK
ஜன 26, 2025 12:56

மக்களை ஏமாற்ற நினைத்து சில தேவையற்ற பொருட்களை ஆவனப்படுத்துகிறார்கள் இந்த மதமாற்ற, கம்யூனிச கும்பல். பழம்பெருமையால் பயனில்லை.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 26, 2025 12:10

பொருங்கப்பா....ஏன் அவசர படுகிறீர்கள் திராவிட மாடல் ஆட்சியில் வேறு ஒரு சம்பவம் நடக்காமலா போய்விடும்....அண்ணாமலை பல்கலைகழக சம்பவம், அரிட்டாபட்டி போராட்டம், கிழிந்த பெரியார் முகமுடி, திருப்பரங்குன்றம் விவகாரம் இவைகளை மடை மாற்ற 5300 வருட தொன்மையான இரும்பு கனிமங்களை கண்டு பிடித்தது தமிழர்கள் தான் என உருட்டிணோம்....தேவைப்படும் போது உங்களை உபயோக படுத்தி கொள்கிறோம் பொறுமையாக இருங்கள்....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை