உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் காங்., கோஷ்டி தலைவர்கள் கடுப்பு

சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் காங்., கோஷ்டி தலைவர்கள் கடுப்பு

தமிழக மாணவர்களுக்கான கல்வி நிதியை, மத்திய அரசு விடுவிக்காததை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, தமிழக காங்., கோஷ்டி தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆக., 30ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் ஈடுபட்டுள்ளார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., அலுவலகம் அருகில், மூன்றாம் நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் அவரை, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தன்னிச்சையாக உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார். சக எம்.பி.,க்கள், டில்லி தலைமை, மாநிலத் தலைமை என, யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. வரும் 7ம் தேதி ஓட்டு திருட்டு தொடர்பாக, மத்திய அரசை கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடக்க உள்ளது. இதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில், சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளாரா என, தமிழக காங்., கோஷ்டி தலைவர்கள், கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஓட்டு திருட்டு தொடர்பான விழிப்புணர்வை மடை மாற்றும் செயலாக சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளது. 'அவரது நோக்கம் சரியானது தான். தற்போது ஓட்டு திருட்டு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் சூழலில், அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த வேண்டும்' என தெரிவித்துஉள்ளார். அதேபோல் தமிழக காங்., முன்னாள் தலைவர்கள், சிட்டிங் எம்.பி.,க்கள், சசிகாந்த் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகாந்தை, தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவர் சின்னதம்பி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று மாலை 4:00 மணிக்கு கோயம்பேடு அம்பேத்கர் சிலை முன் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்' என, அறிவித்துள்ளார். சசிகாந்த் வெளியிட்ட வீடியோவில், 'என் கோரிக்கையை, பிரதமர் மோடி, மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு, தமிழகம் எடுத்து செல்ல வேண்டும். என் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும்' என தெரிவித்துள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை