வருகிறது டிசம்பர்; முடிகிறது ஊரக உள்ளாட்சிகள் பதவி: தேர்தல் குறித்து முடிவெடுப்பதில் அரசு திணறல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், டிசம்பரில் முடிவடையும் நிலையில், தேர்தல் நடத்துவது தொடர்பாக, அரசு எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி உட்பட ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் உள்ள 1.19 லட்சம் பதவிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின், மற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 23,978 பதவிகளுக்கு, 2021ல் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் டிசம்பரில் முடிவடைகிறது. மேலும், 2021ல் நடத்தப்பட்ட மாவட்டங்களில், 2026 செப்டம்பரில் பதவிக்காலம் முடிவடைகிறது.இவை அனைத்துக்கும் சேர்த்து, ஒருங்கிணைந்த தேர்தல் நடத்தப்படுமா அல்லது பதவிக்காலம் முடிவடைந்த 27 மாவட்டங்களுக்கு மட்டும், தற்போது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: ஊரக உள்ளாட்சிகளில் உள்ள, 510 ஊராட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிலும் சில குழப்பங்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, நிதி பிரச்னை போன்ற காரணங்களால், ஊராட்சி பகுதிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளில் இணைக்க, அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், 2026ல் முடிவடையும் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்த்து, 2025ல் ஒருங்கிணைந்த உள்ளாட்சி தேர்தல் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில், அரசு இன்னும்இறுதி முடிவு எடுக்கவில்லை. தற்போது டிசம்பரில் பதவிக்காலம் முடியும் ஊராட்சிகளுக்கு, தேர்தல் நடத்த மேலும் மூன்று மாதம் அவகாசம் உள்ளது. எனவே, ஜனவரிக்குபின்தான், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதா அல்லது சிறப்பு அதிகாரிகள் நியமிப்பதா என்பதில் முடிவு தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.