உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 பக்கத்திற்குள் பத்திரம்: பதிவுத்துறை கட்டுப்பாடு

10 பக்கத்திற்குள் பத்திரம்: பதிவுத்துறை கட்டுப்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சொத்து விற்பனை பத்திரங்களை, 10 பக்கங்களு க்குள் முடிக்க வேண்டும்; இதற்கு மேல் இருக்கும் கூடுதல் பக்கம் ஒவ்வொன்றுக்கும் தலா, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்' என, பதிவுத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரங்கள், விற்பனை ஒப்பந்தம் போன்ற பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்கின்றனர். பதிவு பணிகளை விரைவுபடுத்தவும், எளிமைபடுத்தவும் பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக, 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மென்பொருள் வந்த நிலையில், பதிவுத்துறை இணையதளத்தில், 'டேட்டா ஸ்டோரேஜ்' எனப்படும் தரவுகள் சேமிப்பு அதிகமானதால், 'சர்வர்' வேகமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்காக, புதிதாக பதிவாகும் பத்திரங்களில், பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பதிவு செய்யப்படும் அனைத்து பத்திரங்களையும், 'ஸ்கேன்' செய்து கணினியில் பதிவேற்றம் செய்வது வழக்கம். ஒரு பத்திரத்துக்கு, 400 ரூபாய் கணினி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணம், 10 பக்கங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு மேல் பக்கங்கள் இருந்தால், 11வது பக்கம் முதல் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஸ்கேன் கட்டணமாக, தலா, 100 ரூபாய் வசூலிக்கப்படும். கூடுதல் பக்கத்துக்கான ஸ்கேன் கட்டணங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும், அமல்படுத்தாமல் இருந்தோம். தற்போது சர்வர் பிரச்னை ஏற்படுவதால், இதை கண்டிப்புடன் அமல்படுத்த, சார் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பதிவுத்துறை இணையதள சர்வரில் சுமை அதிகரிப்பதை தடுக்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து பத்திரங்களை எழுதும்போது, 10 பக்கங்களுக்குள் முடிக்க வேண்டும். முறையாக திட்டமிட்டால், இந்த வரம்புக்குள் முடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இது சாத்தியமா

ஆவண எழுத்தர்கள் கூறியதாவது: பொதுவாக மனைப்பிரிவு திட்டங்கள், அடுக்குமாடி திட்டங்களில், பல்வேறு சர்வே எண்களின் தொகுப்பாக சொத்து அமைகிறது. இதற்கான ஒவ்வொரு பத்திரத்திலும், ஐந்து முதல், 10 சர்வே எண்கள், உட்பிரிவு எண்கள், அதன் நான்கு எல்லை விபரங்கள் வருவதால், பக்கம் அதிகரிக்கிறது. இதில், வழக்கமான முத்திரைத் தாள்களை பயன்படுத்தினாலும், பக்கம் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், 'இ - ஸ்டாம்பிங்' முறையை பயன்படுத்தினால், ஐந்து பக்கங்களில் பத்திரத்தை முடிக்கலாம்; மீதி ஐந்து பக்கத்துக்கு இணைப்பு ஆவணங்களை சேர்க்கலாம். 'இ - ஸ்டாம்பிங்' எனப்படும் மின்னணு முறையில் முத்திரை கட்டணத்தை செலுத்தினால் போதும்; முத்திரைத்தாள்கள் வாங்க தேவையில்லை. கட்டணம் செலுத்தியதற்கான ரசீது தருவர். அதை பத்திரத்தில் இணைத்தால் மட்டும் போதும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை