திருப்பூர்: குப்பை விவகாரத்தில், திருப்பூர் தி.மு.க., மேயர் தினேஷ்குமாரை விமர்சித்து, 'வீடியோ' வெளியிட்டதற்காக, விவசாயிகள் சங்க நிர்வாகி உட்பட பொதுமக்களை, மேயர் மிரட்டியதாக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து, 'பற்றி' எரிகிறது. இருதரப்பிலும் வெளியான வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பையை, ஐகோர்ட் வழிகாட்டுதல் படி, இடுவாய், சின்னகாளிபாளையம் கிராமத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக கொட்ட, மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.இதற்கு, சின்னகாளிபாளையம், சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை, தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது, சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக உருவெடுத்தது.கண்டிக்கத்தக்கது
இப்பிரச்னை முற்றிய நிலையில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஊர் மக்கள் சிலர், 'சின்னகாளிபாளையத்தில் குப்பை கொட்டக்கூடாது' என்ற கோரிக்கையை முன்வைத்து, திருப்பூர் மேயரை கடுமையாக விமர்சித்தனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதில், மேயரை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை போராட்ட குழுவினரில் பலரும் விரும்பவில்லை. சில நாள் இடைவெளியில், மேயரை விமர்சித்த ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர், அவரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.இதற்கிடையே, சமீபத்தில் சின்னகாளிபாளையம் கிராமத்தில் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, கிராம மக்கள் மத்தியில் பேசும் போது, ஈஸ்வரன் உள்ளிட்டோரை மிரட்டி, மன்னிப்பு கேட்க செய்த மேயரின் செயல் கண்டிக்கத்தக்கது என, பேசினார்.இது மேயரின் பழிவாங்கும் செயல் என்று விமர்சனம் எழுந்தது. திருப்பூர் இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயனும், மேயரின் செயல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது என, கூறியிருந்தார். இந்த விவகாரம், தற்போது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அவமானம்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வீடியோவில் பேசியதாவது: மேயர் மீதான விமர்சனத்தை கிராம மக்களின் உணர்வாக தான் வெளிப்படுத்தினேன். இடுவாய் போராட்ட குழுவை சேர்ந்த, 15 பேர் மேயரை சந்திக்க சென்றனர்.தன் குழந்தைகள் மீது சத்தியமாக, இடுவாய்க்கு குப்பை கொண்டு வரமாட்டேன் என்றும், தன்னையும், தன் தந்தையையும் விமர்சித்து நாங்கள் வெளியிட்ட வீடியோவால், அவருக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாகவும், கட்சித்தலைமை வரை இந்த விவகாரம் சென்று விட்டதால், அவ்வாறு பேசியவர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என, மேயர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.மன்னிப்பு கேட்க என் மனம் உடன்படவில்லை என்ற போதிலும், கிராம மக்களின் நலன் கருதி, மன்னிப்பு கேட்டு வீடியோ அனுப்பியிருந்தேன். அந்த வீடியோவில் தன் முகத்தை பதித்து, அவரது காலில் விழுந்து நாங்கள் மன்னிப்பு கேட்பது போன்ற ஒரு தோற்றத்தை, மேயர் ஆதரவாளர்கள் ஏற்படுத்தி, சமூக ஊடகங்களில் பரப்பி, எங்களை அவமானப்படுத்திவிட்டனர்.இவ்வாறு, அவர் கூறினார். '
பா.ஜ.,வின் தனி நபர் தாக்குதல்'
திருப்பூர் மேயர் தினேஷ்குமார் கூறியதாவது: இடுவாய் முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன் என்னை சந்திக்க நேரம் கேட்டார். அன்று பிற்பகல், 1:00 மணிக்கு அவர் உட்பட 14 பேர் என்னை மாநகராட்சி அலுவலகத்தில் சந்திக்க வந்த போது, அவர்கள் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் விளக்கம் அளித்தேன். தொடர்ந்து, என் மீது நடந்த தனி நபர் தாக்குதல் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். அவ்வாறு பேசியோர் நேரடியாக மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர் என்றனர்.போராட்ட குழுவிலிருந்து அவர்களை விலக்கி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதன் பின், அவர்களாகவே இந்த மன்னிப்பு கேட்கும் வீடியோவை எடுத்து, அவர்கள் வாட்ஸாப் குழுவில் வெளியிட்டனர். எனக்கும் அனுப்பினர். அனைத்து பதிவுகளும் ஆதாரத்துடன் உள்ளது. இது யாரையும், நான் கேட்டோ, மிரட்டியோ நடக்கவில்லை. நான் வற்புறுத்தியதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இடுவாயில் நடப்பது குப்பை பிரச்னை என்பதை விட, பா.ஜ.,வினர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது நடத்தும் திட்டமிட்ட தனிப்பட்ட தாக்குதல். இவ்வாறு அவர் கூறினார்.