உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய்க்கு எதிராக விஷாலை களமிறக்க தி.மு.க., திட்டம்?

விஜய்க்கு எதிராக விஷாலை களமிறக்க தி.மு.க., திட்டம்?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மகள் நடிகை ஸ்ருதி, நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா உள்ளிட்டோர் சட்டசபை தேர்தலில் களம் இறங்க உள்ளனர். த.வெ.க., தலைவர் விஜய்க்கு எதிராக, நடிகர் விஷாலை களமிறக்க, தி.மு.க., தரப்பில் ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0niok5ea&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து ஹீரோ அந்தஸ்து கொண்ட நடிகரை களமிறக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. தி.மு.க.,வில் திரை நட்சத்திரங்கள் பட்டியலில், துணை முதல்வர் உதயநிதி, வாகை சந்திரசேகர், சின்னத்திரை நடிகர்கள் போஸ் வெங்கட், வாசு விக்ரம் போன்றோர் உள்ளனர். பெரிய நட்சத்திர நடிகர், நடிகையர் தி.மு.க.,வில் இல்லை. இருந்தாலும், விஜய் போட்டியிடும் தொகுதியில், நடிகர் சங்க பொதுச்செயலரும், உதயநிதியின் நண்பருமான விஷாலை போட்டியிட வைக்க, அவரிடம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல், ராஜ்யசபா எம்.பி.,யாகி உள்ளார். அவர் தன் மகள் ஸ்ருதி ஹாசனை, தன் அரசியல் வாரிசாக்க விரும்புகிறார். ராஜ்யசபா எம்.பி., பதவி ஏற்க, கமல் டில்லி சென்றபோது, அவருடன் சென்ற ஸ்ருதிக்கும், அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சென்னை தி.நகர் தொகுதியில், பிராமணர் ஓட்டுகள் அதிகம் இருப்பதால், அங்கு அவரை போட்டியிட வைக்க, தி.மு.க., தரப்பில் ஆர்வமாக உள்ளனர். அவரும் சம்மதித்துவிட்டதாக தெரிகிறது. கோவை மாவட்டம், கவுண்டம் பாளையம் தொகுதியில், நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா போட்டியிட வாய்ப்பு உள்ளது. கடந்த ஜனவரியில், அவர் தி.மு.க.,வில் இணைந்ததும், ஐ.டி., அணியின் மாநில துணைச் செயலராக நியமிக்கப்பட்டார். திவ்யாவுக்கு மட்டுமின்றி, தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும், சத்யராஜ் பிரசாரம் செல்லவும் வாய்ப்பு உள்ளது. விஜய்க்கு எதிராக, நடிகர்கள் எஸ்.வி.சேகர், வடிவேலு, பிரகாஷ்ராஜ், விஷால் உள்ளிட்டோரை, தேர்தல் பிரசாரத்திற்கு அனுப்பி வைப்பதன் வாயிலாக, திரையுலக நட்சத்திரங்களின் ஆதரவு, விஜய் கட்சிக்கு செல்லாமல், தி.மு.க.,வுக்கு ஆதரவாக தக்கவைக்க முடியும் என அக்கட்சி கருதுகிறது. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ