மதுரையில் தி.மு.க., இளைஞரணி மாநாடு பலத்தை காட்ட லட்சங்களில் பரிசு மழை
மதுரை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், எதிர் அணியினர் வலுவான வியூகம் வகுத்து வரும் சூழலில், அதை வலுவாக எதிர்க்க தி.மு.க.,வும் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் களம் இறங்கி உள்ளது. இதையடுத்து, கட்சியின் இளைஞரணி மாநாடுகளை நடத்துவதோடு, இளைஞரணியில் 5 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 18 முதல் 35 வயதுள்ளவர்களின் ஓட்டுகளை சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெற வேண்டும் என இளைஞரணி செயலர் உதயநிதி மாவட்டச் செயலர்களுக்கு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார். த.வெ.க.,வுக்கு இணையாக ஆளுங்கட்சியிலும் இளைஞர்கள் கூட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இளைஞரணி மண்டல மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது.
தி.மு.க., இளைஞரணி முதல் மாநில மாநாடு, இம்மாதம் கோவையில் நடக்கிறது. 2வது மாநாடு மதுரையில் நடத்தப்படவுள்ளது. மாநாடு தேதி அறிவிப்பு, இடம் தேர்வு என எதுவுமே நடக்காத நிலையிலும், மாநாட்டிற்கான பணிகளை மதுரை லோக்கல் அமைச்சர் மூர்த்தி முடுக்கி விட்டுள்ளார். இதன் எதிரொலியாக, 'அதிக எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய், 75,000 ரூபாய், 50,000 ரூபாய் என அடுத்தடுத்து ரொக்க பரிசுகள் வழங்கப்படும்' என அவர் அறிவித்துள்ளார். இது, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தொகுதிகளில் 60 முதல் 80 தொகுதிகளாக தமிழகத்தைப் பிரித்து மேற்கு, மத்தி, தெற்கு, சென்னை என நான்கு மண்டல மாநாடுகள் நடக்க உள்ளன. பிற கட்சிகளை போல் இளைஞர்கள் கூடிக்கலையும் கூட்டமாக இல்லாமல், கட்டமைப்புக்கு உட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்து மக்கள் பாதிக்காத வகையில் முன்மாதிரியான மாநாடாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தது 3 லட்சம் இளைஞர்கள் வரை மாநாட்டில் பங்கேற்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். சமீபத்தில் தி.மு.க., பொதுக்குழு மதுரையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதைவிட இரு மடங்கு அளவுக்கு இளைஞரணி மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.