உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேண்டாம் கவுரவ விரிவுரையாளர் வேலை; அதிர்ச்சியில் பாரதியார் பல்கலை

வேண்டாம் கவுரவ விரிவுரையாளர் வேலை; அதிர்ச்சியில் பாரதியார் பல்கலை

கோவை : பாரதியார் பல்கலையில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இல்லாததால், குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.கொங்கு மண்டலத்தின் முக்கிய பல்கலையாக பாரதியார் பல்கலை இருந்து வருகிறது. பல்கலையில், கடந்த 2022ம் அக்., மாதம் முதல், துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது.தவிர, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் டீன், துணை பதிவாளர், தொலைதுார கல்வி மைய இயக்குனர், நிதி அலுவலர், பல்கலை பொறியாளர், உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு அதிகாரி உட்பட, 330 பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாகவுள்ளன.இது ஒரு புறம் என்றால், பல்வேறு துறைகளிலும் விரிவுரையாளர்பணியிடங்களும் காலியாக உள்ளன. இப்பணியிடங்களில் நிரந்தர விரிவுரையாளர்களை நியமிப்பது, தற்போதைக்கு சாத்தியமில்லை.இதனால், கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க, பல்கலை நடவடிக்கை எடுத்தது. இதற்கான அறிவிப்பு கடந்த, 12ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்படும் விரிவுரையாளர்களுக்கு, தொகுப்பூதியமாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 23 துறைகளில், 81 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.விண்ணப்பதாரர்கள், முதுநிலை பட்டப்படிப்பில், 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அல்லது, பி.எச்டி., பட்டம் பெற்றிருத்தல் உள்ளிட்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முதுநிலை பட்டப்படிப்பில், 50 சதவீதம் பெற்றிருந்தால் போதும் என, கூறப்பட்டிருந்தது.விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்ற நிலையில், 81 பணியிடங்களுக்கு, 15 விண்ணப்பங்கள் மட்டும் பதிவாகியுள்ளது, பல்கலை நிர்வாகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை