'தமிழகம் முழுதும் எங்கு பத்திரப்பதிவு நடந்தாலும், கூடுதலாக கமிஷன் கேட்டு, அதில் 10 சதவீதத்தை அமைச்சர் மூர்த்திக்குக் கொடுக்கின்றனர்,'' என, தன் பிரசார பயணத்தில் குற்றஞ்சாட்டிப் பேசினார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, ''பழனிசாமி சொல்வது முழு பொய். எங்காவது அப்படி நடந்து, அதை நிரூபித்தால், பழனிசாமி சொல்வதை நான் கேட்கிறேன்,'' என சவால் விட்டுள்ளார். இருவரும் பேசிய விபரம்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும் இருப்பவர் மூர்த்தி. அவர் எப்படிப்பட்டவர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் பதவி வகிக்கும் பத்திரப்பதிவு துறையில் கொள்ளையும், லஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=71pf5e5y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை, மக்களும் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். டாஸ்மாக்கில் விற்பனையாகும் சரக்கு பாட்டில் ஒவ்வொன்றின் மீதும் அனுமதிக்கப்பட்ட விலையைத் தாண்டி, கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்தனர். மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்காக, அப்படி பணம் வாங்கினர். அதே வகையில் தான், இப்போது அமைச்சர் மூர்த்தி கிளம்பி இருக்கிறார். அவருக்கு கொடுப்பதற்காக, ஒவ்வொரு பத்திரப்பதிவின் போதும் கூடுதலாக கமிஷன் பெற்று, அதில் 10 சதவீதத்தை அவருக்கு அளிக்கின்றனர். அப்படி கொடுக்காதவர்கள் யாரும் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. பலர் கஷ்டமான சூழ்நிலையில் தான், அடுத்தவருக்கே சொத்துக்களை விற்கின்றனர். அப்படிப்பட்டவர்களிடம் கூட கொள்ளையடிக்கின்றனர். இப்படித்தான் அவலமான ஆட்சியை தி.மு.க., நடத்துகிறது. தமிழகம் முழுதும், 582 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சார் - பதிவாளர் யாரையும், ஓராண்டுக்கு மேல் அங்கு பணிபுரிய விடுவதில்லை. தேவையில்லாமல் இடமாற்றம் செய்கின்றனர். மாறுதல் கேட்டு வரும்போது, அவர்களிடம் பெரும் தொகை கேட்டு வசூலிக்கின்றனர். இதுவும் ஒருவிதத்தில் ஊழல் தான். அதுகுறித்து, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம். அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சியில் தான், மக்களுக்கான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இதுதான், அ.தி.மு.க.,வுக்கு வயிற்றெரிச்சலை கிளப்பி உள்ளது. 'பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒவ்வொரு பதிவுக்கும் கூடுதலாக கமிஷன் பெற்று, அதில் 10 சதவீத கமிஷனை பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள், அமைச்சர் மூர்த்திக்கு கொடுக்கின்றனர் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். பொதுமக்கள் மட்டுமல்ல; அ.தி.மு.க.,வைச் சேர்ந்தோருக்கும் சேர்த்தே பத்திரப்பதிவுகள், தமிழகம் முழுதும் நடக்கின்றன. எனக்காக, யாராவது லஞ்சம் வாங்கினர் என்று சொல்லி, பழனிசாமி அதை நிரூபித்தால், அவர் என்ன சொல்கிறாரோ, அதை கேட்க நான் தயார். இப்போதும், ஆதாரத்துடன் தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில், பத்திரப்பதிவுத் துறையில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியும். நடந்த குளறுபடிகளுக்கு என்னிடம் ஆதாரங்களே உள்ளன. அது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடப்பதால், அது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை. காலம் வரும்போது, அதை கட்டாயம் வெளிப்படுத்துவேன். அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது போல், தி.மு.க., ஆட்சியில் எந்த நிலமும் தவறாக பதிவு செய்யப்படவில்லை; வெளிப்படையாகவே நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்பட்ட வருவாய் விபரங்களை சொல்லத் தயாராக உள்ளோம். வெறும் அரசியலுக்காக, பொய்யான குற்றச்சாட்டுகளை பழனிசாமி கூறக்கூடாது. அ.தி.மு.க., ஆட்சியில் 8,000 கோடி ரூபாயாக இருந்த பத்திரப்பதிவுத் துறை வருமானம், தற்போது உயர்ந்துள்ளது. - நமது நிருபர் - '