கரூரில் இ.எம்.ஐ., நிவாரணம்; மக்கள் நீதி மய்யம் புதுமை
சென்னை : கரூரில் உயிரிழந்த, 41 பேரில் எட்டு குடும்பத்தினருக்கு, நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நிவாரண உதவி வழங்கினார். மீதமுள்ள 33 குடும்பத்தினருக்கு, கட்சி நிர்வாகிகள் நேற்று நிவாரண நிதி வழங்கினர். த.வெ.க., தலைவர் விஜய், செப்., 27ம் தேதி, கரூரில் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். உயிரிழந்தோர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் அரசு தரப்பில் பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. அதே போல, நடிகர் விஜய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் இருபது லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். காங்., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும் இழப்பீடு அறிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்க, கமல், நேற்று முன்தினம் கரூர் சென்றார். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில், எட்டு பேர் குடும்பத்தினரை, கமல் சந்தித்து ஆறுதல் கூறினார். கூடவே, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். மீதமுள்ள 33 குடும்பத்தினர், வெவ்வேறு இடங்களில் வசிப்பதால், கமல் அங்கு செல்லவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் தங்கவேலு தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் வழங்குவர் என அறிவித்து விட்டுத் திரும்பினார். இதனால், 'உயிரிழந்தோர் குடும்பத்தினரில் எட்டுப் பேருக்கு மட்டும் தான் வழங்கி விட்டு, மீதமுள்ள குடும்பங்களுக்கு கட்சி நிர்வாகிகள் வழங்குவர்' என நடிகர் கமல் தெரிவித்தது, 'இழப்பீட்டுத் தொகையை இ.எம்.ஐ., போல தவணை முறையில் வழங்குகிறாரா?' என பலரும் கிண்டல் செய்தனர். இதையடுத்து, மீதமுள்ள 33 குடும்பத்தினருக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நேற்று வழங்கினர்.