உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 4வது உயிரியல் பாரம்பரிய தளமாக ஈரோடு நாகமலை குன்று அறிவிப்பு

4வது உயிரியல் பாரம்பரிய தளமாக ஈரோடு நாகமலை குன்று அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்று, தமிழகத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் உயிரியல் பன்மைச் சட்டத்தின் கீழ், கடந்த 2022 நவம்பரில், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, கடந்த மார்ச்சில் திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி, கடந்த செப்டம்பரில் ஈரோடு மாவட்டம் எலத்துார் ஆகியவை, பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல முன்னோடி முயற்சிகள் வாயிலாக, பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை தமிழகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 20 'ராம்சார்' தளங்களுடன், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தளங்களைக் கொண்ட மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது. பல்லுயிர் பாரம்பரிய தளங்கள் என்பவை, தனித்துவமான, நலிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள். இவை இயற்கையுடனான கலாசார பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன. ஒரு பகுதிக்கு, பல்லுயிர் பாரம்பரிய தள அங்கீகாரம் கிடைப்பது, உள்ளூர் சமூகங்களுக்கு பெருமையை அளிக்கிறது. பல்லுயிர் பாரம்பரிய தளம் அந்தஸ்து, உள்ளூர் சமூகங்களின் பாரம்பரிய நடைமுறைகளையோ அல்லது வழக்கமான பயன்பாட்டையோ கட்டுப்படுத்தாது. மாறாக, சூழலியல் சமநிலையை மேம்படுத்துகிறது; மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. நாகமலை குன்று ஒரு சூழலியல் வளமிக்க இடமாகவும், இடம்பெயர்ந்து வரும் மற்றும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், பல்வேறு சதுப்பு நில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு, ஒரு முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது. அதன் நிலப்பரப்பில் உள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள், பாறை பகுதிகள் ஆகியவை, பல்லுயிர்களுக்கு வாழ்விடமாக உள்ளன. நாகமலை குன்றை உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிக்க வேண்டும் என, எலத்துார் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஈரோடு கலெக்டரும் ஒப்புதல் அளித்துள்ளார். நாகமலை குன்றை, வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்க இந்த அறிவிப்பு உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வெளிறிய பூனை பருந்து கடந்த, 2024ல் நடத்தப்பட்ட தமிழக ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பின்படி, நாகமலை குன்றில், 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள், 7 பாலுாட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்தி இனங்கள், 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள முக்கிய உயிரினங்களில், பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனை பருந்து ஆகியவை அடங்கும். 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கல்வெட்டு நாகமலை குன்று தொல்லியல் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது. இரும்பு காலத்தைச் சேர்ந்த கற்குவை வட்டங்கள், பாறை மறைவிடங்கள், பழங்கால முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்கள் ஆகியவற்றின் சான்றுகள், அதன் வரலாற்று ஆழத்தை எடுத்துக்காட்டுகின்றன. தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட, 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சுவாமி கல்வெட்டு ஒன்று, அதன் கலாசார பாரம்பரியத்தை காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ