உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்: பார்லி., குளிர்கால கூட்டத்தில் காத்திருக்கும் அனல்

 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்: பார்லி., குளிர்கால கூட்டத்தில் காத்திருக்கும் அனல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், வரும் டிச., 1ம் தேதி துவங்குகிறது. இதில் மிக முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே வேளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், குளிர்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச., 1 முதல் 19ம் தேதி வரை நடக்கவுள்ளது. வார விடுமுறையை கழித்தால் வெறும் 15 நாட்களே இந்த கூட்டத் தொடர் நடக்கும். இந்த கூட்டத்தொடரில் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக, ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பிரதமர், முதல்வர், அமைச்சர்களின் பதவி தானாகவே பறிபோகும் அரசியல் சாசன திருத்த மசோதா, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. எதிர்க்கட்சியினரை குறிவைத்தே அரசியல் சாசன திருத்த மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறி, கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் காங்., உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், அரசியல் சாசன திருத்த மசோதாவும், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதாவும் பார்லி., கூட்டுக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதாவை ஆய்வு செய்து வரும் பி.பி.சவுத்ரி தொடர்ச்சி 2ம் பக்கம் முக்கிய மசோதாக்களை தலைமையிலான பார்லி., கூட்டுக்குழு, குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே தன் பரிந்துரையை சமர்பிக்கவுள்ளது. இந்த இரு மசோதாக்களும் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதற்கு மூன்றில் இரு மடங்கு ஆதரவு தேவை என்பதால், இந்த மசோதாக்களை நிறைவேற்றுவது என்பது மத்திய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், காப்பீட்டுத் துறையில், 100 சதவீத அளவுக்கு நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க வகை செய்யும் காப்பீட்டு திருத்த மசோதாவை நிறைவேற்றவும் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. மேலும், அணு எரிசக்தி, உயர் கல்வி, காப்பீடு, நெடுஞ்சாலை துறைகளிலும் சீர்திருத்தம் மேற்கொள்ள புதிதாக, 10 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மணிப்பூர் சரக்கு மற்றும் சேவைகள் வரி திருத்த மசோதா, பழைய சட்டங்கள் ரத்து மற்றும் திருத்த மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, அணு எரிசக்தி மசோதா, கார்ப்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா, பங்குசந்தை குறியீட்டு திருத்த மசோதா, குறைதீர்ப்பு மற்றும் சமரச திருத்த மசோதா, உயர்கல்வி அமைப்புக்கான திருத்த மசோதா, திவால் திருத்த மசோதா, விஷ்வாஸ் திருத்த மசோதா ஆகியவற்றை அறிமுகம் செய்யவுள்ளது. பீஹாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகள் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கே சாதகமாக வந்ததால் கடும் அதிருப்தியில் உள்ளன. மேலும், தமிழகம், மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட, 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருவதால், இது தொடர்பான பிரச்னையை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவுள்ளன. இதனால், குளிர்கால கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி