உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துாத்துக்குடிக்கு இறக்குமதியாகும் குஜராத் உப்பு; உற்பத்தி பாதிப்பால் அடையாளத்தை இழக்கும் அவலம்

துாத்துக்குடிக்கு இறக்குமதியாகும் குஜராத் உப்பு; உற்பத்தி பாதிப்பால் அடையாளத்தை இழக்கும் அவலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: உப்பு உற்பத்திக்கு பெயர்போன துாத்துக்குடி மாவட்டத்திற்கு, குஜராத் மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகித்து வரும் துாத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு, 25 லட்சம் டன் உற்பத்தி நடந்து வருகிறது.மாவட்டத்தில் 25,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கிறது. இத்தொழிலில், 50,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.சில ஆண்டுகளாகவே பருவம் தவறி பெய்யும் மழை காரணமாக உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், உப்பு உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் இருந்து 40,000 டன் உப்பு இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள், வியாபாரிகள் சங்க தணிக்கையாளர் ராகவன் கூறியதாவது:

பருவம் தவறிய மழை

இந்தியாவிலேயே துாத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு தனி மவுசு உண்டு. தமிழகத்தில் மட்டும் தான் இயந்திரம் இல்லாமல் உப்பு உற்பத்தி நடக்கிறது. இதனால், சமையலுக்கு பயன்படுத்த அனைவரும் துாத்துக்குடி உப்பை விரும்புவர். தொழில் பயன்பாட்டிற்கு குஜராத் மாநில உப்பு பயன்படுத்துவர். வழக்கமாக ஜனவரி 2வது வாரத்தில் உப்பு உற்பத்தி துவங்கிவிடும். ஐந்தாண்டுகளாக பருவம் தவறி பெய்யும் மழையால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஒரு டன் உப்பு 3,500 -- 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். தற்போது உப்பு தட்டுப்பாடு காரணமாக, 5,500 -- 6,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதனால், வியாபாரிகள் குஜராத் மாநிலத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.துாத்துக்குடி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ள குஜராத்தில் இருந்து கன்டெய்னரில் பிரிபுளோ பண்டல்கள், பிரிபுளோ மூட்டைகளை இறக்குமதி செய்து வியாபாரத்தை பாதுகாக்க போராடி வருகிறோம்.உப்பு விலை ஏற்றத்தால் கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் உப்பு வியாபாரத்தை இழந்துவிட்டோம். குஜராத்தில் இருந்து கொச்சி துறைமுகம் வழியாக ஈரோடு, திருப்பூர் ஊர்களுக்கு பிரிபுளோ மூட்டைகள் கன்டெய்னரில் வருவதால் நாங்கள் வியாபாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, துாத்துக்குடியில் தயார் செய்யும் லேமினேஷன் பருமணி கல் உப்பு பண்டல்கள் போல, குஜராத்திலும் தயாரிக்கின்றனர்.

அதிகரிக்க முடியும்

இதே நிலை நீடித்தால் வியாபாரிகள் பலரும் தொழிலை விட்டு செல்லும் நிலை ஏற்படும். துாத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால், வேறு வழியின்றி வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்து கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தமிழகத்தில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க அரசு முன்வர வேண்டும். உப்பளங்களுக்கான இடங்கள், குறைந்த கட்டணத்தில் மின்சாரம் போன்ற சலுகைகளை வழங்கினால் மட்டுமே உப்பு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என, உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kumar
ஏப் 15, 2025 14:26

விடியலின் சிறப்பு


kannan sundaresan
ஏப் 15, 2025 11:58

தமிழக முதல்வர் தமிழர்கள் பிரச்சனையை பேச மாட்டார். 50000. தொழிலாளர்கள் பாதிக்கபட்டுள்ளனர். தொகுதி MP என்ன செய்து கொண்டிருக்கிறார்?


அப்பாவி
ஏப் 15, 2025 07:21

சீக்கிரமே சீன உப்பு வந்துரும். கவலைய உடுங்க.


சமீபத்திய செய்தி