புதுடில்லி: நாடு முழுதும், தெருவோர கடைகள் மற்றும் ஹோட்டல்களில், உபயோகித்த சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிஉள்ளது. உலகிலேயே அதிக அளவில் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா முன்னணியில் இருக்கிறது. சமையலுக்காக நம் நாட்டில் ஆண்டுக்கு, 2,500 கோடி லிட்டர் எண்ணெய் செலவாகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bn3621wl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உணவு பாதுகாப்பு இதில், வீடுகளில் 60 சதவீத எண்ணெய், எஞ்சிய 40 சதவீத எண்ணெய் ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்கள் மற்றும் தெருவோர உணவகங்களில் பயன்படுத்தப் படுகிறது. சமையல் எண்ணெய் நுகர்வுத் திறன் மி க அதிகமாக இருப்பதால், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி, அவற்றை பயன்படுத்துவதிலும், அப்புறப்படுத்துவதிலும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விதிகளை வகுத்துள்ளது. 'தினசரி, 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெய் வாங்கி பயன்படுத்தும் உணவகங்கள், அதன் தரத்தை சோதித்து பதிவு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு உள்ளது. எண்ணெயின் தரத்தை மதிப்பிடும் டி.பி.சி., 25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அந்த அளவை கடந்து இருந்தால், அது பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல என, உணவு பாதுகாப்பு ஆணையம் விதிகளை வகுத்துள்ளது. வறுக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களின் தரம் மற்றும் பாதுகாப்பின் அளவீடாக, டி.பி.சி., எனப்படும் மொத்த சேர்ம கலவைகள் உள்ளன. எண்ணெயை அடிக்கடி சூடாக்கும்போதோ, ஈரப்பதத்தில் இருக்கும்போதோ சமையல் எண்ணெய் நச்சு நிறைந்ததாக மாறிவிடும். சமையலுக்கு தகுதியற்ற அந்த எண்ணெயை பயன்படுத்தினால் உயர் ரத்த அழுத்தம், பெருந்தமனி தடிப்பு, அல்சைமர், கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய்களை கூட ஏற்படுத்தும். தவிர, உடலில் தீய கொழுப்புகளையும் அதிகரித்து ஆபத்தான விளைவை ஏற்படுத்தும். மறுபயன்பாடு எனவே தான், 25 சதவீத டி.பி.சி., வரம்பை கடந்த சமையல் எண்ணெயை அதை சேகரிக்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி சேகரிக்கப்படும் எண்ணெயை கழிவுநீரிலோ, கால்வாய்களிலோ ஊற்றி அழிக்கக்கூடாது. லேபிள் ஒட்டி தனி கொள்கலனில் பாதுகாக்க வேண்டும். உபயோகப்படுத்தப்பட்ட இந்த எண்ணெய் பின்னர் பயோ டீசலாக மாற்றப்படும். இதற்காகவே, 'உபயோகித்த சமையல் எண்ணெய் மறுபயன்பாடு' என்ற திட்டத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 2018ல் கொண்டு வந்தது. அதன்படி 2030ல் டீசலில், 5 சதவீத அளவுக்கு இந்த பயோ டீசல் கலப்பதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் உணவகங்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உணவு பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைப்பு சார்ந்த எண்ணெய் சேகரிப்பு வலைப்பின்னலுடன், பயோ டீசல் உற்பத்தியாளர்கள் மற்றும் உணவகங்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்த கொள்கையும் வகுக்கப்பட்டது. ஆனால், சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் வகையில், உபயோகித்த சமையல் எண்ணெய் பயன்பாடு நாடு முழுதும் பரவலாக அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. நடவடிக்கை அதில், 'இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சமையல் எண்ணெய் மறுபயன்பாடு பிரசாரம் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. அதன் கொள்கைகளும் பலவீனமாக உள்ளன' என குற்றஞ்சாட்டி உள்ளது. 'சிறிய மற்றும் முறைப் படுத்தப்படாத உணவகங்களில், உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த வகை சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தன்னார்வ தொண்டு நிறுவனம் முறையிட்டது. இதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு: நாடு தழுவிய அளவில் இந்த பிரச்னை நிலவுகிறது. எனவே, பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உபயோகித்த சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என தொடர் பிரசாரம் செய்தும், சிறு உணவகங்கள், தெருவோர கடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்களின் உடல் நலனுக்கு தீங்கானது மட்டுமல்ல, அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல். எனவே, மாநில வாரியாக இது தொடர்பான தரவுகளை சேகரித்து, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை அடுத்த இரு வாரங்களுக்குள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.