உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆசிரியர் பாஸ் செய்ய வைத்தால் எமிஸ் பெயில் ஆக்குகிறது; மாணவர்கள் தேர்ச்சி பதிவேற்றத்தில் மல்லுக்கட்டு

ஆசிரியர் பாஸ் செய்ய வைத்தால் எமிஸ் பெயில் ஆக்குகிறது; மாணவர்கள் தேர்ச்சி பதிவேற்றத்தில் மல்லுக்கட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிவுகளை 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்யும் போது ஆசிரியர்கள் 'பாஸ்' மதிப்பெண் வழங்கிய மாணவர்களுக்கு எமிஸில் 'பெயில்' என பதிவேற்றம் ஆவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளன. அதற்காக தேர்ச்சி விவரத்தை எமிஸில் பதிவேற்றும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம் உள்ளது. எனினும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்கள் தேர்ச்சி விவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஆசிரியர்கள் குழப்பம்

ஒன்பதாம் வகுப்பில் 35 மதிப்பெண் பெற்றால் தான் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும். ஆனால் அந்தந்த அரசு பள்ளிகளில் செயல்படும் தேர்ச்சிக் குழு, ஒவ்வொரு ஆண்டும் 'தேர்ச்சிக்கு தேவையான 35 மதிப்பெண் பெறாத மாணவர்கள் 25 மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம்' என தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றன. இதுபோன்ற பள்ளித் தேர்ச்சிக் குழு தீர்மானங்களை பின்பற்ற கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் எமிஸில் மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்படும்போது 35 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்ற மாணவர்களை 'பெயில்' என பதிவு செய்கிறது. இதனால் ஆசிரியர்கள் குழப்பமடைகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பள்ளிகளில் செயல்படும் தேர்ச்சி குழுக்கள் தீர்மானத்தை பின்பற்ற வேண்டாம் என உத்தரவிட வேண்டும் அல்லது 35 மதிப்பெண்களுக்கும் கீழ் பதிவேற்றம் செய்தாலும் தேர்ச்சி பெற்றதாக பதிவாகும் வகையில் 'எமிஸில் சாப்ட்வேரை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு பிரச்னைகளையும் சரிசெய்யாமல் ஆண்டுத் தேர்வு முடிவுகளை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர். 1-8 ம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்' என்பதால் அவ்வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியில் பெரிய குழப்பம் எழுவதில்லை.ஆனால் ஒன்பதாம் வகுப்பு விவரம் பதிவேற்றம் ஒரு போராட்டமாகவே மாறிவிட்டது. 9ம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து பத்தாம் வகுப்புக்கு கொண்டுசெல்லும் போது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி கடுமையாக பாதிக்கிறது. ஆனால் ஏன் தேர்ச்சி பாதித்தது என ஆசிரியர்களிடம்தான் அதிகாரிகள் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்கின்றனர். இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

கேள்விக்குறியாகும் மாணவர்கள் 'திறமை'

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.,) அடிப்படையில், தற்போது சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மூன்று, ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிக்கான மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவும், அதிலும் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் அதே வகுப்பில் படித்து பாடங்களை நன்கு கற்கும் முடிவுக்கு, பெற்றோரிடம் விருப்ப கடிதம் பெறப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு என்.இ.பி.,யை பின்பற்றாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதேநேரம் இதுபோல் மாணவர்கள் தேர்ச்சியை பிற மாநிலங்களை விட அதிகரித்து காட்டுவதற்காக, குறைந்த மதிப்பெண் பெற்றவரையும் தேர்ச்சி பெற வைக்கும் நடவடிக்கையால் அந்த மாணவர்கள் போதிய திறமை இல்லாமலேயே அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது அவர்கள் எதிர்காலத்தை பாதிக்காதா எனவும் ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
மே 05, 2025 08:18

தமிழ்நாட்டு மக்களை படிக்க வைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே அவர்களை படிக்கவைக்காமல் செய்வதே கொள்கை. ECR & OMR இல் தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கு சரியான வேலைகளில்லை, மற்ற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்தான் அதிகம். சினிமா துறையில் தன் வீட்டு பெண்கள்_பிள்ளைகள் படிக்க அனுப்பிவிட்டு மத்த வீட்டு பெண்களிடம் காதல் செய்தும், மற்ற வீட்டு பிள்ளைகளிடம் அன்பு செலுத்துவது போலிருக்கிறது.


ராஜ்
மே 05, 2025 07:34

இது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லை எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு மார்க் போட்டு டென்னிஸ் ஏத்துங்க தீர்ந்தது பிரச்சனை