கோவை : கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்துார், ஆலாந்துறை மற்றும் பேரூர் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில், அனுமதியின்றி செம்மண் வெட்டி, லோடு லோடாக கடத்தப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் குழு ஆய்வு செய்து, சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
சமீபத்தில் நடந்த விசாரணையில், இயற்கை வளம் சுரண்டல், சட்ட விரோத செங்கல் சூளைகள் செயல்பட்ட விஷயத்தில், தவறு செய்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் நீதிபதிகள் கேட்டிருக்கின்றனர். இவ்வழக்கு டிச., 6ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.இதுகுறித்து, தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறியதாவது:
குற்றத்தை ஊக்குவிக்கும் துறைகளாக, வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை மற்றும் காவல்துறையினர் செயல்படுகின்றனர். வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ., மற்றும் தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோரை, அரசு பணியில் இருந்தே நீக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை முன்னுதாரணமாக இருக்கும். குற்றம் செய்யாமல் பாதுகாக்க வேண்டியவர்களே, ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.இனி தவறுக்கு உடந்தையாக இருக்கக்கூடாது என்கிற எண்ணம், அதிகாரிகளிடம் ஏற்பட வேண்டும். தவறு செய்த அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். இதனால், சட்ட விரோதமாக கனிம வளம் எடுப்பதை தடுக்க வேண்டும் என்கிற உணர்வு மாநிலம் முழுவதும் உள்ள அதிகாரிகளிடம் ஏற்படும்.இவ்வாறு, கூறினார். 'ரூ.3,000 கோடி இழப்பு'
''தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் ஐந்து வருவாய் கிராமங்களில், 806 இடங்களில் ஆய்வு செய்ய வேண்டும்; 565 இடங்களில் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. 4,500 ஏக்கரில், 50 அடி முதல், 120 அடி வரை கனிம வளம் எடுக்கப்பட்டிருக்கிறது. 3,000 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ''அதிகாரிகள் குறைவான அளவு கொடுத்திருக்கின்றனர். ஐகோர்ட் சிறப்பு கவனம் செலுத்தி, தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆய்வு செய்ய நீதிபதிகளை நியமித்தால், உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வரும்,'' என்றார் கணேஷ்.