உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் இருந்து குவைத் செல்லும் விமானங்களை காரணமின்றி நிறுத்திய இந்திய விமான நிறுவனங்கள்

தமிழகத்தில் இருந்து குவைத் செல்லும் விமானங்களை காரணமின்றி நிறுத்திய இந்திய விமான நிறுவனங்கள்

தமிழகத்தில் இருந்து குவைத் நாட்டுக்கு, இந்திய விமான நிறுவனங்கள் இயக்கிய தினசரி விமான சேவைகளை காரணமின்றி ரத்து செய்வதாக அறிவித்திருப்பது, பயணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டிக்கெட் செலவு, 25,000 ரூபாய் கூடுதலாகி உள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் இருந்து, தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. தொழில், கல்வி, சுற்றுலா, முதலீடு, மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காக, சர்வதேச பயணியர் லட்சக்கணக்கில் தமிழகம் வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்களுக்கு, குறிப்பிட்ட சில நேரடி விமான சேவைகள் மட்டுமே உள்ளன. கொரோனாவுக்கு பின், தமிழகத்தில் சர்வதேச விமான சேவைகள் மற்றும் பயணியர் வருகை கணிசமாக குறைந்து வருகிறது. வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை கூட, இந்திய விமான நிறுவனங்களான, 'இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனங்கள் ஒழுங்காக வழங்குவது கிடையாது. இந்நிலையில், சென்னை மற்றும் திருச்சியில் இருந்து குவைத்துக்கு, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' மற்றும், 'இண்டிகோ' நிறுவனங்கள் இயக்கி வந்த விமான சேவைகள், நாளை முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் திட்டமிட்டு, தமிழகத்தின் சர்வதேச விமான சேவைகளை முடக்கி வருவதாக, விமான போக்குவரத்து வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 50 ஆண்டுகள்

அவர்கள் கூறியதாவது:

தமிழகத்துக்கும் குவைத்துக்குமான விமான போக்குவரத்து, 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. சென்னை, திருச்சியில் இருந்து இயக்கப்படும் விமானங்களில், பயணியர் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். குறிப்பாக, திருச்சி மற்றும் டெல்டா சுற்றுவட்டார பகுதிகளில் இருப்போர் பலர், குவைத்தில் வேலை செய்கின்றனர். ஆனால், வாரத்துக்கு ஒரு விமானம் மட்டுமே, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்கி வந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என்று, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதற்கு இந்திய விமான நிறுவனங்கள், 'இரு நாடுகள் இடையேயான விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில், அனுமதிக்கப்பட்ட இருக்கைகள் முழுதும் பயன்படுத்தப்பட்டு விட்டன; இனி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் வந்தால் மட்டுமே சேவைகள் அதிகரிக்கப்படும்' என்று தெரிவித்தன. ஒப்பந்தம் புதுப்பிப்பு இதற்கிடையில், கடந்த ஜூன் 15ம் தேதி, குவைத் அரசுடன் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்பந்தத்தை புதுப்பித்தது. இதில், 6,000 இருக்கைகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இனி, தமிழகத்தில் இருந்து சேவைகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய விமான நிறுவனங்கள், தமிழகத்தில் இருந்து குவைத்துக்கு இயக்கிய விமான சேவைகளை முழுதும் நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அதே நேரத்தில், வெளிநாட்டு விமான நிறுவனங்களான, 'ஜஜீரா ஏர்லைன்ஸ், குவைத் ஏர்வேஸ்' நிறுவனங்கள், சென்னையில் இருந்து குவைத்துக்கு சேவைகளை அதிகரித்துஉள்ளன. ஜஜீரா விமான நிறுவனம், சென்னையில் இருந்து வாரத்துக்கு ஒரு சேவை வழங்கி வந்தது, அது, இப்போது மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குவைத் ஏர்வேஸ் நிறுவனம், வாரத்துக்கு ஐந்தாக வழங்கிய சேவைகளை, வாரம் முழுவதும் என மாற்றியுள்ளது. வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி விமானங்களை இயக்குகிறது. இந்திய விமான நிறுவனங்களோ, காரணமின்றி சேவைகளை நிறுத்துகின்றன. மூன்று சேவைகள் குறிப்பாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், சென்னை, திருச்சியில் இருந்து குவைத்துக்கு இயக்கிய விமான சேவைகளை ரத்து செய்து, பயணியருக்கு தேவை இல்லாத பெங்களூருவில் இருந்து குவைத்துக்கு அக்., 1ல் இருந்து வாரத்துக்கு மூன்று சேவைகளை வழங்க உள்ளது. இது, விமான போக்குவரத்தில், தமிழகத்தை பின்னுக்கு தள்ள திட்டமிட்டு நடத்தப்படும் சதியாகவே தெரிகிறது. இனி தமிழகத்தில் இருந்து குவைத்துக்கு சென்று வர குறைந்தது, 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் கூடுதலாக செலவாகும். வெளிநாட்டு விமான நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையை தந்து தான், அங்கு செல்ல முடியும். மாநில அரசின் தலையீடு, மத்திய அரசின் நடவடிக்கை இருந்தால் மட்டுமே, இனி தீர்வு காண முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

panneer selvam
அக் 01, 2025 21:19

It is the duty of Tamilnadu MPs especially Trichy MP to take up the subject with minister of civil aviation and try not to cancel the existing flying rights . Unfortunately our MPs are too busy in fight against Election commission on SIR and Gaza while our Trichy MP Durai Vaiko does not know where is Trichy . If the people are blind , there is no use of bioscope .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை