சென்னை : தமிழக பா.ஜ.,வில் உள்கட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. நவம்பர் இரண்டாவது வாரம், கிளை அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது.தமிழக பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதைதொடர்ந்து, கிளை, மண்டலம், மாவட்ட, மாநில அளவில் உள்கட்சி தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். உள்கட்சி தேர்தலை நடத்த, மாநில துணை தலைவர் எம்.சக்கரவர்த்தி தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழுவை, பா.ஜ., தேசிய தலைமை கடந்த வாரம் நியமித்தது. கிளை அளவில் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான தேர்தல், வரும் நவ., மாதம் முதல் துவங்குகிறது. இதுகுறித்து, உள்கட்சி தேர்தல் குழு தலைவர் சக்கரவர்த்தி கூறியதாவது: பா.ஜ.,வில் கிளை, மண்டலம், மாவட்டம், மாநில அளவில் தேர்தல் நடத்தி முடிந்ததும், தேசிய அளவில் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடக்கும். கிளை அமைப்பில், ஒரு தலைவர் மற்றும் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தமிழகத்தில் கிளை அளவில் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான தேர்தல், நவ., 11ம் தேதி துவங்குகிறது. அதை தொடர்ந்து, அடுத்த நிலை பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தப்படும். இதற்காக, 50 உறுப்பினர்களை சேர்த்த தீவிர உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.