'டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை தோண்டி எடுக்கும் திட்டங்களை தடை செய்வதற்காக, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் என்று அறிவிப்பதற்கு, மத்திய அரசுக்கு என்று சிறப்பு கொள்கை ஏதும் உண்டா' என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக, லோக்சபாவில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி., சுதா எழுப்பியிருந்த மூன்று கேள்விகள் குறித்த விபரம்: ↓தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டம் துவங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? ↓கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்கள் துவங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு வந்துள்ள விண்ணப்பங்கள் பற்றிய விபரம் என்ன? ↓டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை தோண்டி எடுக்கும் திட்டங்களை தடை செய்வதற்காக, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் என்று அறிவிப்பதற்கு, மத்திய அரசுக்கு என்று சிறப்பு கொள்கை ஏதும் உண்டா?இந்த கேள்விகளுக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: ↓கடந்த ஐந்து ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி எதையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கவில்லை. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் சுற்றுச்சூழல் அனுமதிக்கான கால நிர்ணயத்தை மேலும் நீட்டித்து, உத்தரவு வழங்கப்பட்டுள்ளது ↓ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, பி-2 பிரிவின் கீழ், மூன்று கோரிக்கை விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக, இந்த விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. முதலாவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்ட அனுமதி கேட்டு, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இரண்டாவதாக நாகப்பட்டினம் மற்றும் கடலுார் ஆகிய கடலோர பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்திடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.மூன்றாவதாக, அதே வேதாந்தா நிறுவனத்திடமிருந்து கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது ↓மாநில அரசுகளிடம் இருந்து முன்மொழிவு வரும்பட்சத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ், குறிப்பிட்ட சில பகுதிகளை 'எக்கோ சென்சிடிவ் ஜோன்' மற்றும் 'எக்கோ சென்சிடிவ் ஏரியா' என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்து ஆணை வெளியிடும்.இது தொடர்பான முன்மொழிவு எதுவும் தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை. எண்ணெய் வயல் ஒழுங்குமுறைச் சட்டம் 1948 மற்றும் அதன் துணை விதிகள் 1959 என இரண்டுமே அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இவை இரண்டிலுமே, இதுபோன்ற முன்மொழிதல்களை ஏற்பதற்கான வழிமுறைகளும் கூறப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.குற்றம் சுமத்துவது கேவலமான அரசியல்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:காவிரி நீர் பிரச்னையில், விவசாயிகளை வஞ்சித்து, தமிழகத்தின் உரிமையை, தி.மு.க., அரசு தாரை வார்த்து கொடுத்துள்ளது. டெல்டாவை பாலைவனமாக்கும், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு, அன்று தி.மு.க., அரசு தான் துணை நின்றது. கடந்த 2011ம் ஆண்டு, 'கிரேட் ஈஸ்டன் எனர்ஜி' நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது ஸ்டாலின். அன்று மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, 'மீத்தேன்' திட்டத்தை, டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்துவதில், நாங்கள் பெருமை கொள்கிறோம்' என்றார். இதை டெல்டா விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. போராட்டங்கள் நடத்தினர். அ.தி.மு.க., ஆட்சியில், பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அவரை விவசாயிகள் சந்தித்து, 'டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்று பழனிசாமி, 'சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து எழுதிய நேர்முக கடிதத்தை, நானும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி முருகானந்தம், ககன்தீப்சிங் பேடி ஆகியோரும், அன்றைய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம், நேரில் வழங்கினோம். அவர் கடிதத்தை வாங்கிக் கொண்டு, 'இந்திய அரசியல் சட்டத்தின்படி, வேளாண் துறை மாநிலப் பட்டியலில் உள்ளது. இந்த விஷயத்தில், மாநில அரசே முடிவு எடுக்கலாம்' என்றார். அதன் அடிப்படையில், சட்டசபையில் பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்த மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டது. பார்லிமென்டில் தற்போதைய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தமிழக வேளாண் துறையிடமிருந்து, எந்த கடிதமும் கிடைக்கப் பெறவில்லை எனக் கூறியதாக, ஒரு செய்தி உலா வருகிறது. தி.மு.க.,வினர் ஐ.டி., விங் வாயிலாக, தவறான தகவலை பரப்புகின்றனர்.வீணான சர்ச்சையை உண்டு பண்ணி, அ.தி.மு.க., மீது குற்றம் சுமத்த விழைவது கேவலமான அரசியல். இவ்வாறு அவர் கூறினார். -- நமது டில்லி நிருபர் -