லோக்சபாவிற்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான சட்டம் விரைவில் கொண்டு வரப்படலாம். பார்லிமென்டின் இரு அவைகளிலும் பா.ஜ., கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. என்றாலும் 3 ல் 2 பங்கு ஆதரவு தேவை. அவ்வாறு ஆதரவை பெற்று மசோதாவை கொண்டு வர பிற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது பா.ஜ.,நம்நாட்டில் 1951 முதல் 1967 வரை லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்திலேயே நடத்தப்பட்டன. நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியான, நம்பூதிரிப்பாடு தலைமையிலான கேரள அரசை 1959 ல் கலைத்தது காங்கிரஸ் அரசு. பிறகு கேரளா சட்டசபைக்கு தனியாக 1960ல் தேர்தல் நடந்தது. இப்படி பல மாநிலங்களில், காங்., ஆட்சியில் சட்டசபைகள் கலைக்கப்பட்டன. மத்தியிலும் 'தொங்கு பார்லிமென்ட்கள்' அமைந்தன. இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாமல் போனது. இப்போது இவற்றிற்கெல்லாம் முடிவு கண்டு சட்டத்திருத்தங்களை ஏற்படுத்தி ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமா என்று வாக்காளர்களாகிய பல்துறை சார்ந்த தினமலர் வாசகர்களிடம் கேட்டோம். அவர்கள் கூறியது...நடைமுறை சாத்தியமற்றது
- அஜ்மல்கான்மூத்த வழக்கறிஞர், மதுரைஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமற்றது. பன்முகத்தன்மைக்கு எதிரானது. கூட்டாட்சி தத்துவம் தான் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கூறு. அதை மாற்ற பார்லிமென்ட்டிற்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் திருத்தம் செய்ய பார்லி.,க்கு உரிமை இல்லை என 1971 ல் கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.ஜனாதிபதி அவசர நிலையை பிரகடனம் செய்யும் போதுதான் அரசியலமைப்பின் அடிப்படைக் கூறுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முடியும். சாதாரண நாட்களில் அவ்வாறு செய்ய இயலாது. லோக்சபா, ராஜ்யசபாவில் பா.ஜ.,விற்கு பெரும்பான்மை இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டுவர மாநில அரசுகளின் ஒப்புதல் தேவை. இதையும் தாண்டி கொண்டு வந்தாலும் அதை நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்புகள் அதிகம். நாட்டில் வேலை வாய்ப்பின்மை, வறுமை நிலவுகிறது. இதைப் போக்க வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற பிரச்னைகளை பேசுபொருளாக மாற்றுவது மக்கள் நலனிற்கு எதிரானது.செலவு, நேரம், ஊழல் குறையும்
- பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர், கோவைநல்ல நோக்கத்தில் தான் மத்திய அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்தியாவில் இந்தமுறை ஏற்கனவே அமலில் இருந்தது தான். தற்போது தேர்தல் அறிவித்தாலே நன்னடத்தை விதிகள் இரண்டு மாதங்களுக்கு மேல் கூட அமல்படுத்தப்படுகிறது. அரசு பணிகள் எதுவும் நடக்காது. மக்களுக்கும் பல்வேறு அசவுகரியங்களும், அரசுக்கு நிர்வாக சிக்கல்களும் ஏற்படுவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. அதுபோல் ரூ. பல கோடிகள் தேர்தலுக்காக செலவிடப்படுகிறது. ஒரு மாநிலத்தில் இரண்டு முறை தேர்தல் நடத்துவதை விட ஒரே நேரத்தில் நடத்தினால் செலவும் குறையும். நேரம் மிச்சமாகும். ஊழலும் வெகுவாக குறையும்.தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்படுகிறது. மாதக் கணக்கில் கல்வியும் பாதிக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் கமிஷன், மத்திய, மாநில அரசுகளுக்கு நிர்வாக ரீதியாக எளிதாக தான் இருக்கும். அதேநேரம் அதிக எண்ணிக்கையில் மனித சக்திகளும் தேவையாக இருக்கும். இந்த திட்டத்தை 2029ல் இருந்து மத்திய அரசு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள் வாரியாக அதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களுக்கும் சரியான தீர்வையும் மத்திய அரசு வைத்திருக்க வேண்டும்.அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்
- மணிகண்டன், சமூக ஆர்வலர், மதுரைநம் நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது அடிக்கடி தேர்தல் நடத்துவது என்பது செலவு பிடிக்கும் விஷயம். தேர்தலுக்கு ஆறு மாதம் முன்பாகவே தயாராக வேண்டும், ஓட்டு மெஷின்களை பராமரிக்க வேண்டும், மனிதவளத்தை அதிகப்படுத்துவதோடு துணை ராணுவப்படையை தயார் செய்ய வேண்டும்.அடிக்கடி தேர்தல் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி நிர்வாக விஷயங்கள் முடங்கி விடுகிறது. மக்களுக்கான குறைதீர் கூட்டம் கூட நடத்தமுடியாது, மக்கள் சேவைக்காக கட்டப்பட்ட கட்டடங்களை கூட அவசரம் கருதி திறக்க முடியாது. எல்லா நலத்திட்டங்களுக்கும் முட்டுக்கட்டையாக நடத்தை விதிகள் இருக்கும். ஒரே நாடு… ஒரே தேர்தல் இதற்கான தீர்வாக இருக்கும்.அந்தந்த மாநிலங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என அரசியல்வாதிகள் நினைப்பது தவறு. தங்களது மாநில தேர்தலுக்காகவும், மத்திய தேர்தலுக்காகவும் ஒரே நேரத்தில் பிரசாரம் செய்யப் போகின்றனர். அவ்வளவு தான் வித்தியாசம். மத்திய, மாநில பிரச்னைகளை ஒரே நேரத்தில் அரசியல்வாதிகள் பேசமுடியும். இது நடுநிலைமையுடன் தான் செல்லும். இதை அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.மக்கள் வரிப்பணம் மிச்சமாகும்
- ராமகிருஷ்ணன், பொறியாளர், மதுரைஇம்முறையில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடத்தப்படுவதால் மாநில நலன் கருதி பலதிட்டங்கள் கொண்டு வரப்படலாம். இதனால் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். உதாரணமாக, மாநிலங்களுக்கிடையே ஏற்படும் காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு கட்சிகள் தள்ளப்படும்.நிர்வாக ரீதியாக செலவுகள் குறையும், மக்கள் வரிப்பணம், நேரம் மிச்சமாகும். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்குரிய ஓட்டுரிமை இருக்கும் இடத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியும். இதனால் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரே நேரத்தில் பல ஓட்டுகள் அளிப்பது போல எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரே நேரத்தில் ஓட்டளிக்கப் போகிறோம். எனவே மக்களுக்கு இதில் சிரமம் இருக்காது.அரசியலுக்கான நடவடிக்கை
- கிலாடியஸ் ரஞ்சனி, சமூக ஆர்வலர், மதுரைஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது பல குழப்பங்களை ஏற்படுத்தும். சட்டசபை தேர்தல் என்பது கிராமங்கள் அளவில் என்ன அடிப்படை தேவைகள் என்பதை மக்கள் எதிர்பார்பார்கள். அந்த தேவைகள் நிறைவேற்றப்படும்போது அதன் தொடர்ச்சியாக லோக்சபா தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்புகள் அமையும்.உதாரணமாக மாநிலத்தில் ஆளும் கட்சி செயல்பாடு சரியில்லை என்றால் லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அக்கட்சி சார்ந்த கூட்டணிக்கு எதிராக மக்கள் ஓட்டளிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை, தேர்தல் பணிகள் என்பது பெரும் சவாலாகவே இருக்கும். தற்போது தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. இதுபோன்ற முயற்சிகட்சிகள் அரசியல் செய்வதற்காக பயன்படுமே தவிர களநிலவரத்தில் மக்கள், அரசு நிர்வாகத்திற்கு எவ்வகையில் எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்பது கேள்விக்குறியே.முன்னேறிய நாடாக உருவாகும்
- ஆர்.வைரம், உதவிப் பேராசிரியர், தேனிசேர்த்து தேர்தல் நடத்தப்படும் போது நேரம், பணம் மிச்சமாகும். இந்த நிதியை உற்பத்தி துறையில் கவனம் செலுத்தி, முதலீடுகளை பெருக்கலாம். ஒரே நாடு ஒரே தேர்தலால் ரூ.2.5 லட்சம் கோடி மிச்சமாகும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. 2047ல் இந்தியா உலகளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக உருவாக இது உதவும்.கண்காணிப்பது மிகவும் சிரமம்
பி.பாலகிருஷ்ணன், கல்வியாளர், ராமநாதபுரம் இத்திட்டத்தால் தேர்தலில் தேவையற்ற குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகிவிட்டால் அதை சரிசெய்ய போதுமான வசதிகள் இல்லை. ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் போது கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைத்து தொகுதிகளிலும் தங்களது கொள்கை, கருத்துக்களை பிரசாரம் செய்ய முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்காளர்கள் எண்ணிக்கை, தொகுதிகளின் எண்ணிக்கை வேறுபாடுகள் உள்ளன. பிற்காலத்தில் அமெரிக்கா போல இரு கட்சி ஆட்சி வர வாய்ப்பு உள்ளது. வளர்ந்து வரும் இந்தியாவில் இது தேவை இல்லாத குழப்பத்தை உண்டாக்கும். செலவு குறையும் என்கின்றனர். ஆனால் நிர்வாகம், பாதுகாப்பில் சிக்கல் உள்ளது.பொருளாதாரம் பாதுகாக்கப்படும்
- எஸ்.கண்ணப்பன், தலைமை ஆசிரியர் (ஓய்வு), சிவகங்கைஅரசுக்கு வீண் விரய செலவு தவிர்க்கப்படும். நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும். மக்களும் ஒவ்வொரு மாநில தேர்தல் முடிவுக்கு ஏற்ப மனமாற்றமின்றி, திடமான அரசு அமைய ஓட்டளிப்பார்கள். எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி தேர்தல்களை தனித்தனியாக நடத்துவதால், அரசியல் கட்சிகளும், அடுத்த தேர்தலில் மக்களை கவர எந்தவிதமான நடவடிக்கை, கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தான் யோசிப்பார்கள். மக்களுக்கான நலத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்குவதில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், தேர்தல் காலம் தவிர்த்து மற்ற நான்கரை ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை குறித்து கட்சிகள், தலைவர்கள் சிந்திப்பார்கள். அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீதோஷ்ண நிலை இருப்பதில்லை. இதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதம் குறையக்கூடும்.நன்மையும், நடைமுறை சிக்கலும்
- பி.சாமி, பேராசிரியர், விருதுநகர்தமிழக சட்டசபைக்கு 2026ல் தேர்தல் வரவுள்ளது. ஆனால் லோக்சபா தேர்தலோ 2029ல் தான் வரும். இந்த சட்டத்தை நிறைவேற்றினால் 2026 சட்டசபை தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறி. யார் ஆட்சி தொடர்வார் என்பதும் கேள்விக்குறி. மற்ற மாநிலங்களிலும் இதே பிரச்னை உள்ளது. இதை எப்படி மத்திய அரசு சந்திக்க போகிறது என்பது சாதாரண வாக்காளனாக எனக்கு கேள்வி. லோக்சபா தேர்தல் ஒன்றரை மாதம் வரை நடந்தது. சட்டசபை தேர்தலும், இணைந்து நடத்தினால் இன்னும் காலதாமதமாகலாம். நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். தொழில்நுட்பங்களை உபயோகித்து தேர்தல் நடைமுறைகளை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும்.தமிழகத்திற்கு இது புதிதல்ல
* லோக்சபாவிற்கும், சட்டசபைக்கும்
சேர்ந்து தேர்தல் நடப்பது தமிழகத்தை பொறுத்தவரை புதிதல்ல. தமிழகத்தில்
1962, 1967, 1971, 1984, 1991, 1996 என ஆறு முறை லோக்சபா தேர்தலுடன்,
சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது. * 1977, 1980ல் ஒரே ஆண்டில் ஆனால் சில மாத இடைவெளியில் இரண்டிற்கும் தேர்தல் நடந்துள்ளது.