ஸ்டாலினிடம் அனுமதி பெறும் நிலையில் ராகுல் இருக்கிறாரா: காங்கிரசார் காட்டம்
முதல்வர் ஸ்டாலினிடம் கூறிவிட்டு தான், த.வெ.க., தலைவர் விஜயிடம் ராகுல் பேசியதாக, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு, அக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கரூர் துயர சம்பவத்தையொட்டி, விஜயை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதை, தமிழக காங்கிரசில் ஒரு கோஷ்டியினர் வரவேற்றனர். ஆனால், தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி கூறுகையில், ' ராகுல் தேசிய தலைவர். விஜயுடன் தனிப்பட்ட முறையில் நட்பு வைத்துள்ளார். அதன் அடிப்படையில், பேசினார். இதனால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உடையாது' என்றார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், 'கரூர் சம்பவம் நடந்தபோது, அங்கு இருந்தவர் விஜய். எனவே, அவரிடமும் எப்படி நடந்தது என ராகுல் கேட்டிருக்கலாம்' என்றார். இந்நிலையில், 'முதல்வர் ஸ்டாலினிடம் கூறிவிட்டு தான், விஜயிடம் ராகுல் பேசினார்' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார். அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து விஜய் ஆதரவு கோஷ்டி காங்., நிர்வாகிகள் சமூக வலைதளங்களில், வெளியிட்ட பதிவுகள்: அனுமதி வாங்கி பேசும் நிலையில் ராகுல் இல்லை. அவரின் செல்வாக்கு தெரியாமல், காங்., தலைவர்கள் பேசக்கூடாது ஸ்டாலின் அனுமதி தந்து தான், விஜயிடம் ராகுல் பேச வேண்டிய அவசியமில்லை. கடந்த 2009 முதல் ராகுல் - விஜய் நட்பு தொடருகிறது தி.மு.க.,வின் ஊதுகுழலாக செல்வப்பெருந்தகை மாறிவிட்டாரா; ராகுலுக்கு தனித்து முடிவெடுக்க அதிகாரம் இல்லையா? இவ்வாறு கூறியுள்ளனர். - நமது நிருபர் -