| ADDED : மே 22, 2025 06:53 AM
மதுரை: தமிழக சிறைகளில் கைதிகளின் ஜாதியை கேட்கக்கூடாது என்ற அரசு உத்தரவு வரவேற்கத்தக்கது என்றாலும், சட்டம்ஒழுங்கை காக்கவும், சிறைகளில் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படாது என்கின்றனர் சிறை காவலர்கள்.சிறைகளில் கைதிகள் சிலருக்கு ஜாதி அடிப்படையில் கழிப்பறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜாதிய பாகுபாடு கூடாது என்று உத்தரவிட்டது.இதன் அடிப்படையில் தமிழக அரசு வெளியிட்ட ஆணையில், சிறைகளில் எந்த வேலையையும் கைதிகளுக்கு ஜாதி அடிப்படையில் ஒதுக்கக்கூடாது. ஜாதி குறித்த விபரங்கள்பதிவேடுகளில் பராமரிக்கக்கூடாது. சிறையில் அடைக்கும்போது ஜாதி தொடர்பாக எந்த விபரத்தையும் கேட்கக்கூடாது. விசாரிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், நடைமுறையில் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்கின்றனர் சிறை காவலர்கள்.அவர்கள் கூறியதாவது: தென்மாவட்டங்களில் ஜாதி ரீதியாக முன்விரோத கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன. அதில் தொடர்புடையவர்களை சிறையில் அடைக்கும்போது ஜாதி அடிப்படையில் பாதுகாப்பு கருதி தனி 'செல்'லில் அடைத்து பாதுகாக்கிறோம். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களின் ஆட்கள் வேறு ஒரு வழக்கில் சிறையில் இருக்க வாய்ப்புண்டு. அவர்கள் சிறைக்குள்ளேயே பழிக்குப்பழி வாங்க திட்டமிடலாம். இதற்கு முன்உதாரணங்கள் உள்ளன.சிறையில் அடைக்கும்போது கைதியின் ஜாதியை கேட்டு அவரது நடவடிக்கைகளை ஓரளவு யூகித்து எச்சரிக்கையாக இருக்க முடியும். ஜாதி ரீதியாக கைதிகள் ஒன்று சேருகிறார்களா என கண்காணித்து 'அலர்ட்' செய்து அவர்களை வேறு சிறைகளுக்கு இடமாற்றி கலவரம் ஏற்படாமல் தடுக்க முடியும். சட்டம் ஒழுங்கையும் காக்க முடியும். சிறைக்குள் பிரபல ரவுடிகள் ஜாதி அடிப்படையிலேயே கூட்டாளிகளை சேர்த்து, அவர்களை ஜாமினில் அனுப்பி கொலை உட்பட தங்கள் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.ஆவணங்களில் ஜாதி குறித்து பதியக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் குறிப்பிட்ட ஆண்டுகளில் இடமாறிச்செல்வர். அடுத்து வரும் அதிகாரிகளுக்கு, கைதிகளின் பின்புலத்தை அறிய பதிவேடுகளை படித்தாலே போதும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பதிவேடுகளில் பதிவு செய்யாதபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே எந்தெந்த தேவைக்கு மட்டும் ஜாதி குறித்து கேட்கக்கூடாது என அரசு தெளிவுப்படுத்தி உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறினர்.